மடு ஆலய சூழலில் விஷ ஜந்துக்கள் தங்கியிருப்போர்! எச்சரிக்கை.

(வாஸ் கூஞ்ஞ)  மன்னார் மருதமடு ஆலயப் பகுதியில் கடந்த ஓரிரு தினங்கள் ஒரு சில மணி நேரம் பெய்த மழை காரணமாக பல்வேறுபட்ட விஷ ஜந்துக்கள் வெளியேறியமையால் மடு ஆலய சூழலில் தங்கியிருப்போர் விஷ ஜந்துகளால் ஒரு சிலர் பாதிக்கப்பட்டமையால் இங்கு தங்கி வாழ்வோர் விழிப்புடன் இருக்கும்படி மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மறைமாவட்டத்தின் மருதமடு அன்னையின் ஆவணி மாதம் பெருவிழாவுக்கு (15) ஏழு லட்சம் பக்தர்கள் வருவதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக் கிழமை வரை சுமார் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டோர் வருகை தந்து ஆலய சூழலில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த இரு தினங்கள் மடுப் பகுதியில் இடையிடையே பெய்து வரும் பரவலான மழை காரணமாக தமது வாழ்விடங்களில் வசிக்க முடியாது பல்வேறுபட்ட விஷ ஜந்துக்கள் வெளியேறிவரும் நிலை காணப்பட்டு வருவதாகவும்

இதன் காரணமாக பக்தர்கள் விஷ ஜந்துக்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சம்பவங்களும் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில்

மருதமடு ஆலய சூழலில் தங்கியுள்ள பக்தர்கள் இது தொட்ர்பாக விழிப்புடன் இருக்குமாறு மன்னார் பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.வினோதன் தெரிவித்திருப்பதுடன்

ஏதாவது தெரியாத அல்லது அடையாளங்காணப்பட்ட விஷ ஜந்துக்களால் கடியுண்டவர்கள் உடனடியாக மடு தேவாலயத்தில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு  சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

(வாஸ் கூஞ்ஞ)