மலையக எழுச்சி பயண நிறைவு நிகழ்வு! அனைவருக்கும் அழைப்பு.

“மாண்புமிகு மலையக மக்கள்’ – கூட்டிணைவினால்’ ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஜூலை 28ஆம் திகதி தலைமன்னாரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட மலையக எழுச்சிப் பயணத்தின் நிறைவு நாள் நிகழ்வு மாத்தளையில் ஆகஸ்ட்12ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில்  அனைவரையும் பங்குபெறுமாறு அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அருட்திரு செங்கன் தேவதாஸன் கேட்டுக் கெண்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அருட்திரு செங்கன் தேவதாசன்,

மலையகம் 200 எழுச்சிப் பயணத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் மாத்தளை  சிறி அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய கல்யாண மண்டபத்தில் எதிர்வரும் ஆகஸ்ட்12ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு பல்வேறு  நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமாகவுள்ளது.

காலைவேளையில் இறுதி நாள் நிகழ்வு ஆரம்பிக்கப்படும். அதனைத் தொடர்ந்து  தலைமன்னாரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடை பயணம் மாத்தளையை வந்தடைந்த பின் 12:30 மணிக்கு இறுதிநாள் நிகழ்வுகள் நிறைவடையவுள்ளது.

மலையக மக்களின் வருகையின் 200 ஆவது வருடப் பூர்த்தியை நினைவுகூரும் மலையகத் தமிழ் சமுதாயத்தினர், முழுமையான மற்றும் சமமான பிரசைகளாக, அர்த்தபூர்வமாகப் பங்கேற்பதற்காக 11அம்ச கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

தலை மன்னார் முதல் மாத்தளை வரையான நடைபயணம் இப்பிரதிபலிப்பின் பகுதியொன்றாக அமைவதற்கு மேலதிகமாக, அவர்களின் முறையீட்டிற்கு ஆதரவளிக்கும் ஓர் ஆதரவுப் பயணமாக இந்த நடைப்பயணம் அமைந்திருந்தது.

மலையக எழுச்சிப் பயணத்தின் ஆரம்பம் முதல் ஒவ்வொரு நாட்களிலும் ஒவ்வொரு பொழுதுகளிலும் எங்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்கிய, உதவிகள் நல்கிப் பங்களிப்புச் செய்து அனைத்து வழிகளிலும் தோளோடு தோள் நின்ற அரசியல் தரப்பினர், சமூக மட்ட அமைப்புகள், சிவில் சமூகத்தினர், வர்த்தகர்கள், பொது மக்கள் என அனைவருக்கும் இந்த இடத்தில் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாத்தளையில் நடைபெறும் இறுதிநாள் நிகழ்வில் சந்திப்போம்.