பாடசாலை தொடர்பில் வெளியான புதிய தகவல்

பாடசாலை தவணை ஒன்றுக்கு ஒரு செயல் நுால் என்ற வகையில் எதிர்காலத்தில் மூன்று தவணைகளுக்கான பாடசாலை செயல் நுால்கள் மூன்று பகுதிகளாக மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஜயவர்தனபுர கல்வி வலயத்திற்குட்பட்ட ஹேவாகம மாதிரி ஆரம்ப பாடசாலையின் மாணவர் தலைவர்களுக்கான உத்தியோகபூர்வ சின்னங்கள் அணிவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதன் மூலம் மாணவர்களின் புத்தகப் பையின் அதிக எடை குறைவதுடன், மாணவர்களின் முதுகெலும்பை நேராக வைத்து உடல் ஆரோக்கியம் காக்கப்படும் என எதிர்பார்க்கப்படுதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையை மாற்றும் வகையில் 2024 ஆம் ஆண்டின் முதலாம் ஆண்டு தொடக்கம் தவணைப் பரீட்சைகள் குறைக்கப்பட்டு வருடத்திற்கு ஒரு பரீட்சை மாத்திரமே நடத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அவ்வாறு செய்ய முடிந்தால், ஒவ்வொரு பாடம் அல்லது தொகுதியின் முடிவிலும் மதிப்பீடு மூலம் மதிப்பெண்கள் கணினி குறிப்புகளாக பதிவு செய்யப்பட்டு, ஆண்டின் இறுதியில் பரீட்சை மதிப்பெண்களுடன் சேர்க்கப்படும், என்பதோடு, ஆரம்பத்தில் இது பரீட்சை மதிப்பெண் 70% மற்றும் தொகுதி மதிப்பெண்ணில் 30% ஆகவும் கருதப்பட்டாலும், படிப்படியாக அதனை 50% வரை மதிப்பெண்கள் வரம்பில் கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இம்முறையை நடைமுறைப்படுத்தும் போது பாடசாலைக்கு சமூகமளித்தல், தங்கியிருத்தல், தினசரி வகுப்பில் செயற்படுவதும் கட்டாயமாக்கப்படுவதால், பாடசாலை மாணவர்கள் மேலதிக வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்படாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் பெற்றோர்கள் தேவையற்ற போட்டியில் சிக்கிக் கொள்ளாமல் மேலதிக வகுப்புகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்காமல் அந்த பணத்தை குழந்தைகளின் உணவு தேவைக்கு செலவிட முடியும் என்றும் இலவச கல்வியின் அடிப்படை நோக்கங்கள் நிறைவேறும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.