ருஸ்திக் மரணத்துக்கு நீதி கேட்டுப் போராட்டம்!

(எச்.எம்.எம்.பர்ஸான்)

ரிதிதென்ன பவுஸர் விபத்தில் மரணமான 6 வயது சிறுவன் ருஸ்திக்கிக்கு நீதி கேட்டு பாரிய ஆர்ப்பாட்டமொன்று புதன்கிழமை (2) முன்னெடுக்கப்பட்டது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பகுதியில் கடந்த சனிக்கிழமை (29) தண்ணீர் பவுஸர் விபத்தில் 6 வயது சிறுவன் ஒருவன் மரணமடைந்தார்.

இந்த விபத்துக்கு காரணம் அந்தப் பகுதியில் இயங்கி வரும் மண் அகழ்வு நடவடிக்கையே காரணம் எனத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ரிதிதென்ன பிரதான வீதியிலிருந்து சுமார் ஆறு கிலோ மீற்றர்  தொலைவிலுள்ள புதிய கிராமத்துக்கு அருகிலுள்ள குளம் ஒன்றிலேயே மண் அகழ்வு இடம்பெற்று வருகிறது.

சனநடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதி வீதிகளால் கனரக வாகனம் வேகமாக செல்வதால் பாரிய அச்சத்தில் தாம் வாழ்ந்து வருவதாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தின்போது தெரிவித்தனர்.

மண்ணை ஏற்றிக் கொண்டு செல்ல வேறு பாதைகள் உள்ள போதும் தங்களது அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி குடியிருப்பு வீதிகளால் வாகனங்கள் செல்வதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மண் அகழ்வு நடவடிக்கையின் போது மரணமான சிறுவனுக்கு நீதி வேண்டியும் வாகனங்கள் வேறு வீதிகளால் செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து மரணமடைந்த சிறுவனின் பெற்றோர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.