உக்கிரமடைந்துள்ள கடலரிப்பை தடுப்பது குறித்து ஆராய்வு

(ஏ.எஸ்.மெளலானா)   மாளிகைக்காடு பிரதேசத்தில் உக்கிரமடைந்துள்ள கடலரிப்பைத் தடுப்பதற்கான நிரந்தர தீர்வு பற்றி கரையோரம் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ரணவக்க தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் செவ்வாயன்று (01) அப்பகுதிக்கு நோடியாக விஜயம் செய்து, ஆராய்ந்துள்ளனர்.
இதன்போது இப்பகுதியின் கடலரிப்பு கள நிலவரத்தை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட மாளிகைக்காடு கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எம்.எச். நாஸர் இக்குழுவினருக்கு தெரிவுபடுத்தினார்.
நிலைமைகளை அவதானித்த பணிப்பாளர் நாயகம், தற்காலிக தீர்வாக முன்னெடுக்கப்பட்ட மண் மூடையடுக்கும் திட்டத்தின் மீதி வேலையை அவசரமாக நிறைவு செய்யுமாறும் நிரந்தரத் தீர்வுக்கான நகல் திட்டத்தை தயாரிக்கும் பணியை உடனடியாக ஆரம்பிக்குமாறும் கரையோரம் பேணல் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய பொறியியலாளர் எம். துளசிதாஸனுக்கு பணிப்புரை விடுத்தார்.
மாளிகைக்காடு மீன் மொத்த வியாபார வர்த்தக சங்கத்தின் செயலாளர் பைசர், ஜனாஸா நலன்புரி அமைப்பின் உப தலைவர் அனுவர் ஆகியோரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.
இப்பிரதேசத்தின் கடலரிப்பை தடுப்பதற்கான தற்காலிக வேலைத் திட்டம் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் முயற்சியினால் கடந்த ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாகவே பணிப்பாளர் நாயகத்தின் இவ்விஜயம் அமைந்திருப்பதாக மாளிகைக்காடு கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எம்.எச். நாஸர் தெரிவித்தார்.