அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 393,094 சமுர்த்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
தற்போது சமுர்த்தி உதவித்தொகை பெறும் 1,280,000 குடும்பங்கள் நலன்புரி உதவிகளுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 887,653 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், அது நிறைவடைந்தவுடன் புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது 1,792,265 குடும்பங்கள் நலன்புரி உதவிகளைப் பெறத் தகுதியுடையவர்களாக உள்ளதாகவும் அவர்களில் 946,612 குடும்பங்கள் நலன்புரி உதவிகளைப் பெறுவதற்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
20 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்ததன் பின்னர் அந்த இலக்கை எட்ட முடியும் எனவும் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.மேலும் தற்போது உதவி பெறும் முதியோர், சிறுநீரகம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, முந்தைய முறையிலேயே உரிய பணம் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கமைய முதியோர் கொடுப்பனவுகளை தபால் நிலையங்களிலும் சிறுநீரக மற்றும் ஊனமுற்றோருக்கான கொடுப்பனவுகளை பிரதேச செயலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
முதியோர் இல்லங்கள், குழந்தைகள் இல்லங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மையங்களில் உள்ள 11,660 பேருக்கும் பழையபடி உதவித்தொகை வழங்கப்படும்.
அஸ்வெசும நலன்புரி உதவிகள் வழங்குவதற்காக இதுவரை சுமார் 10 லட்சம் கணக்குகளின் விவரங்கள் நலன்புரி மண்டலத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், சமூக நலப் பலன்களைப் பெறத் தகுதியுடையவர்கள் விரைவில் கணக்குத் தொடங்கி நன்மைகளைப் பெறுமாறும் அமைச்சர் கேட்டுக்கொள்கிறார்.அதற்காக பொது விடுமுறை நாட்களிலும் அரசு வங்கி அமைப்பு திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.