சிறுவன் உயிரிழப்புக்கு தண்ணீர் பவுசர் எரிப்பு

வாகரை றிதிதென்னை புதிய கிராமப் பகுதியில் தண்ணீர் பவுசரில் சிக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஆத்திரமடைந்த பிரதேச வாசிகள் தண்ணீர் பவுசரை தீயிட்டு கொழுத்தியதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

றிதிதென்னை புதிய கிராமத்தைச் சேர்ந்த முகம்மது ருஷ்த்திக் வயது (6) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை மாலை (29) தனியார் வகுப்பிற்கு சென்று தமது சகோதரனுடன் துவிச்சக்கர வண்டியில் வரும்போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. முன்னே சென்ற பவுசர் திடிரென பின்னால் வந்ததால் அதில் துவிச்சக்கரவண்டி மோதி பவுசரின் பின் பகுதியில் சிறுவர்கள் இருவரும் அகப்பட்டனர்.

அதில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார் மற்றையவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.இச்சம்பவத்தினை தொடர்ந்து ஆத்திரமடை பிரதேச வாசிகள் வாகனத்தை கொழுத்தியதுடன் அதில் பயணம் செய்தவர்களையும் தாக்க முற்பட்ட போது அவர்கள் ஓடி தப்பியுள்ளனர்.

பின்னர் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று கலவரம் இடம்பெறாமல் தடுத்ததுடன் பவுசர் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பகுதியின் அருகில் உள்ள குளம் ஒன்றில் இருந்து மண் அகழப்பட்டு தென் பகுதிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையானது இடம்பெற்று வருவதாகவும் கனரக வாகனங்கள் இவ் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதனால் வீதியில் புழுதி பரவல் இதன் காரணமாக இடம்பெறுவதனால் பொதுமக்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த பிரதேசத்தின் புழுதி பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் தண்ணீர் இறைக்கும் பவுசர் கடமையில் ஈடுபட்டிருந்தது.இதன்போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளமை பிரதேசத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.பொவிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.