தொகைமதிப்பு வட்ட உத்தியோகத்தர்களை பயிற்றுவிக்கும் பயிற்சிநெறி

மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிசன வீட்டு வசதிகள் தொகைமதிப்பு-2024, நிரல் படுத்தல் கட்டம் தொடர்பாக தொகைமதிப்பு வட்டத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்களை பயிற்றுவிக்கும் பயிற்சிநெறி ஒன்று இடம்பெற்றுள்ளது.

நாடளாவிய ரீதியில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 15வது குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு பணிகளின் ஆரம்ப கட்டச்செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு தொடர்பான பணியில் ஈடுபடவுள்ள வட்ட உத்தியோகத்தர்களுக்கான (Circle Officer) பயிற்சிநெறியானது இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதில் ஒரு பகுதியினருக்கான மூன்று நாள் செயலமர்வு மாவட்ட புள்ளிவிபரவியலாளரும் உதவித் தொகைமதிப்பு அத்தியட்சகருமாகிய திரு ரி.ஜெய்தனன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பிரிவு மண்டபத்தில் கடந்த 18.07.2023 செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி கடந்த வியாழக்கிழமை வரை இடம்பெற்றது.

அவரது தலையுரையில் தொகைமதிப்பு, புள்ளிவிபர தரவுகளின் முக்கியத்துவம், நம்பகத்தன்மையாக தரவுகளை உரிய காலப்பகுதிக்குள் சேகரித்தல் தொடர்பாகவும் குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு–2024ன் நிரல்படுத்தல் கட்டம் தொடர்பாகவும் அதில் ஈடுபடவிருக்கும் தொகைமதிப்பு வட்ட உத்தியோகத்தர்களின் கடமை, பொறுப்புக்கள் மற்றும் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக குறிப்பிடப்பட்டது

மேலும் இப்பயிற்சநெறியின் வளவாளர்களாக மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களில் பணிபுரியும் புள்ளிவிபர உத்தியோகத்தர்கள், மாவட்ட தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரக் கிளையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

அத்தோடு இச் செயலமர்வில் கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று தெற்கு, மண்முனைப்பற்று, மண்முனை மேற்கு, மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேச செயலகங்களிலிருந்து வட்ட உத்தியோகத்தர்களாக (Circle Officer) தெரிவுசெய்யப்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்ததோடு மாவட்ட செயலக புள்ளிவிபரக் கிளையின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன் மற்றுமொரு பகுதியினருக்கான அடுத்த செயலமர்வு இன்று இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.