இளைஞர் யுவதிகளுக்கான மாபெரும் தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிகழ்வு

( வி.ரி.சகாதேவராஜா)

மனிதவலு வேலை வாய்ப்பு திணைக்களத்துடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிகழ்வானது பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் களுதாவளை கலாசார மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இந்த தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிகழ்வில் அரச மற்றும் தனியார் தொழிற்பயிற்சி, தனியார் தொழில் வழங்கல் ஆகிய முப்பதிற்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களின் சேவைகள் பற்றி பங்கேற்றிருந்த இளைஞர் யுவதிகளுக்கு தெளிவுபடுத்தியதுடன் தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர்.

பிரதேச செயலக மனிதவள மேம்பாட்டு உத்தியோகத்தர்களான க. ரவீந்திரன் மற்றும் தெ. ராகவன் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் த. நிர்மல்ராஜ், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் நானூறுக்கும்(400) மேற்பட்ட இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.