கிழக்கு மாகாணத்தில் ஆளுனர் இனவிகிதாசார முறையை பின்பற்ற வேண்டும் – முன்னாள் அமைச்சர் கோரிக்கை

பல்லின சமூகங்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் சகல சமூகங்களும் பயன்பெறக்கூடிய வகையில் முன்னெடுக்கப்படவேண்டும். இதனூடாக நிரந்தரமாக இனங்களுக்கிடையில் ஐக்கியமான இனஉறவு ஏற்படக்கூடிய நிலையை ஏற்படும் என கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை நேற்று ஊடகவியலாளர் மத்தியில் (23) தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை (19) மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை சந்தித்து கலந்துரையாடி போது மேற்கண்டவாறு அவர் அங்கு தெரிவித்தாக குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த 2008ம் ஆண்டிலிருந்து கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் 05 அமைச்சுக்களின் செயலாளர்கள் விகிதாசார அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். அண்மைக்காலமாக இவ்விகிதாசார முறை பேணப்படாமையினால் கிழக்கு மாகாணத்தின் நிர்வாக செயற்பாடுகளில் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை நிபர்த்தி செய்து கிழக்கு மாகாணத்தின் 05 அமைச்சுக்களின் செயலாளர்களையும் விகிதாசார அடிப்படையில் நியமித்து கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளில் இன ஒற்றுமையை ஏற்படுத்தவும்.

கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் பதவிக்கான வெற்றிடம் ஏற்படுகின்ற போது கிழக்கு மாகாணத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் சிரேஷ்ட தரத்திலுள்ள செயலாளர்களை நியமிக்காமல் வெளிமாகாணத்திலிருந்து பிரதம செயலாளரை நியமிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிழக்கு மாகாணத்திலுள்ள சிரேஷ்ட செயலாளர்களுக்கு உரிய இடம் வழங்காமல் புறக்கணிக்கப்படுகின்றனர்.

ஆகவே, எதிர்காலத்தில் கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளருக்கான பதவி வெற்றிடம் ஏற்படுகின்ற போது கிழக்கு மாகாணத்திலுள்ள சிரேஷ்ட செயலாளரை நியமிக்க சிபாரிசு செய்ய வேண்டும் என கோரிக்கைகளை முன் வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் தெரிவித்தாக அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.