புதிய தொழில்நுட்பங்கள் மூலம் தரமான உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும் – அம்பாபறை மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன்

சுய தொழில் முயற்சியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தரமான உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும் – அம்பாபறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட சிறு தொழில் முயற்சியாளர்களின் மாவட்ட விற்பனை கண்காட்சி மற்றும் உணவு திருவிழா, கல்முனை பிரதேச செயலகத்தின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் மருதமுனை கடற்கரையில் (18) நடைபெற்றது.

இதன்போதே அம்பாபறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மேற்கணடவாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில்,

சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு ஊடாக சகல பிரதேச செயலங்களிலும் சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பு செய்யும் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதிய தொழில்நுட்பம் பயன்படுத்துவதால் விரைவாகவும் கூடிய உற்பத்திகளையும் பெற்றுக் கொள்ள முடியும். அதே வேளை உணவு பாதுகாப்பு என்பது முக்கியமாகும்.பிரதேச செயலகங்கள் தோறும் கண்காட்சி மற்றும் விற்பனைகள் இடம்பெறுகின்றன. மாவட்ட நிகழ்வாக இந்த நிகழ்வு இடம்பெறுகிறது. இது சிறு தொழில் முயற்சியாளர்களின் சந்தை வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் ஒரு வேலை திட்டமாகும். சந்தை வாய்ப்பை பொறுத்தளவில் கவர்ச்சிகரமான பொதிகை தயாரிப்பது முக்கியமாகும். உற்பத்திப் பொருளின் தரத்தை அது பொது செய்யப்பட்டிருக்கும் விதம் தீர்மானிக்கிறது. அதேநேரம் பொது மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தரமான உற்பத்திகளையும் சிறு தொழில் முயற்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான தேவையான நிதிகள், கடன் உதவித் திட்டங்கள் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன.

இன்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உணவு பண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றை சந்தைப்படுத்துகின்ற போது பொது மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தயாரிப்பதை சிறுதொழில் முயற்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நிகழ்வில், அம்பாறை மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் ஐ.எம்.நாசர், கல்முனை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம்.ஜவ்பர், பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீரசிங்க, சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ், கல்முனை பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.எல்.ஏ. ஜலீல் உட்பட அம்பாறை மாவட்டத்தில் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் கீழ் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வர்த்தக பிரமுகர்கள் சிறு தொழில் முயற்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதிதிகளை வரவேற்று பொல்லடி கலைஞர்களின் வரவேற்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.