மீள் புனரமைப்பு செய்யப்பட்ட குமுதினி படகின் சமநிலை பரிசோதனை, வல்வெட்டித்துறை – ரேவடி கடற்கரையில் இடம் பெற்றுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான குமுதினி படகு வல்வெட்டித்துறை – ரேவடி கடற்கரையில் வைத்து வல்வெட்டித்துறை – நெடியகாட்டை சேர்ந்த சரவணபவன் என்பவரால் மீள் புனரமைப்பு செய்யப்பட்டது.இந்நிலையில் நேற்று (18) பிற்பகல் 2 மணியளவில் குமுதினி படகின் சமநிலை பரிசோதனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் ஜொய்ஸ் குறூஸ் முன்னிலையில்,
கப்பல் கட்டடக்கலை ஆலோசகர் கலாநிதி விமல்ஸ்ரீயினால் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது குமுதினி படகில் சுமார் 4 ஆயிரம் கிலோ சுமை மற்றும் 85 பயணிகள் ஏற்றப்பட்டு சுமார் 2 மணிநேரம் பரிசோதனை இடம் பெற்றுள்ளது.
பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் அடுத்து வரும் சில நாட்களில் குமுதினி படகு பயணிகள் சேவையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பரிசோதனைக்கு வல்வெட்டித்துறை மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.