பிரதான பொலிஸ் பரிசோதகர் அப்துல் மஜீத் ஒய்வு

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் பெருங்குற்றப்பிரிவிற்குப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய, பிரதான பொலிஸ் பரிசோதகர் மீராசாஹிப் அப்துல் மஜீத் வெள்ளிக்கிழமை(14) தனது 60 ஆவது வயதைப் பூர்த்தியடைந்ததன் காரணமாக பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

சம்மாந்துறைப் பிரதேசத்தில் இஸ்மாலெப்பை மீராசாஹிப் மற்றும் சின்ன லெப்பை ஆசியா உம்மாவிற்கு மகனாக 14.07.1963ஆம் ஆண்டு பிறந்த அப்துல் மஜீத்திற்கு தற்போது ஐந்து மகன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது கல்வியை சம்மாந்துறை அல்-மர்ஜான் தேசிய பாடசாலையில் கற்றதுடன், 1985ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்தார்.

அப்துல் மஜீத அவர்கள் தனது சேவைப்பயிற்சியை மஹியங்கனை இராணுவ பயிற்சிக் கல்லூரியில் நிறைவு செய்ததுடன். கல்குடா பொலிஸ் நிலையத்தில் தனது முதலாவது நியமனத்தைப் பெற்றிந்தார். இதனைத் தொடர்ந்து கொழும்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் உள்ள பல பொலிஸ் நிலையங்களில் தனது சேவையை தொடர்ந்துள்ளார்.

அத்தோடு 1994ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை விசேட அதிரடிப்படையில் இணைக்கப்பட்டு, அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மற்றும் மல்வத்தை விசேட அதிரடிப்படை முகாம்களில் உதவிப் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றியுள்ளார். மீண்டும் 2000ஆம் ஆண்டு முதல் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

இவர் கடமையாற்றிய பிரதேசங்களில் பொது மக்களுடன் சினேகபூர்வமாக பழகியதன் காரணமாக பல குற்றச் செயல்களை இணங்கண்டதுடன், குற்றச் செயல்களை தடுக்கவும் குற்றவாளிகளை கைதுசெய்யவும் இவரால் முடிந்தமை சிறப்பம்சமாகும்.

பிரதான பொலிஸ் பரிசோதகர் அப்துல் மஜீத் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வானது, அக்கரைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமன் பண்டார வழிகாட்டலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விஜயதுங்க பண்டார தலைமையில் மிக விமர்சையாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அவரை கௌரவிக்குமுகமாக பரிசில்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் என்பன வழங்கப்பட்டதுடன், அவரின் சேவையைப் பாராட்டி தமது நன்றி கலந்த வாழ்த்துக்களை விசேட அதிதிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.