கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் வழிகாட்டலில் மற்றும் நிந்தவூர் சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம் றயீஸ் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வானது நேற்று (14) இடம்பெற்றது.
இதில் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நிந்தவூரில் உள்ள உணவக உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இதில் பிளாஸ்டிக் பாவனை, பொலித்தீன் பாவனைகளை எவ்வாறு இல்லாதொழிக்கலாம் மற்றும் அதற்கு மாற்றீடாக பனையோலை, வாழை இலைகளை எவ்வாறு பயன்படுத்தலாம், உணவகங்களில் புகைத்தலை இல்லாதொழித்தல் மற்றும் போதைவஸ்துக்கு அடிமையானவர்களைக்கொண்டு உணவுகளை கையாளுதல், தயாரித்தலை தடைசெய்தல் போன்ற விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இடியப்பத்தை பிளாஸ்டிக் தட்டில் வைத்து உயர்வெப்பநிலையில் அவிக்கும்போது ஏற்படும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வுகள் இடம்பெற்றதுடன் அதற்குப்பதிலாக எமது நிந்தவூரிலிருந்து பனையோலையினாலான இடியப்பத்தட்டுக்களை பாவிப்பதன் அவசியம் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.
அத்துடன் இதன் பாதிப்புக்களை அறிந்திராத பெரியவர்கள், சிறுவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் என பல தரப்பினரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
மேலும் பிளாஸ்டிக், பொலித்தீன் மற்றும் போத்தல்களில் அடைக்கப்பட்ட நீர் போன்றவற்றின் உபயோகத்தினால் ஏற்படக்கூடிய உயிர்க்கொல்லி நோயான கென்சர், மலட்டுத்தன்மை, மூட்டுக்களில் ஏற்படும் வலி மற்றும் மூட்டு தேய்மானங்கள், முடி உதிர்தல் மற்றும் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு என்பனபற்றியும் விழிப்புணர்வூட்டப்பட்டது.
அத்துடன் உணவக உரிமையாளர்கள் இந்த பிளாஸ்டிக் பாவனை மற்றும் பொலித்தீன் பாவனையின் தீங்குகளை உணர்ந்து அதிகமானவர்கள் அவர்களுடைய உணவகங்களில் விற்கப்படும் இடியப்பங்களினை கொள்வனவு செய்யும் குடிசைக்கைத்தொழிலை மேற்கொள்ளபவர்களிற்கு தங்களால் இயலுமான அளவு பனையோலை தட்டினை கொள்வனவு செய்து கொடுப்பதற்கு முன்வந்துள்ளனர்.
நிந்தவூர் சுப்ரீம் லயன்ஸ் கழகம் என்ற அமைப்பானது தாமாக முன்வந்து நிந்தவூரில் பிளாஸ்டிக் பாவனை மற்றும் பொலித்தீன் பாவனைகளை முற்றாக ஒழிக்கவேண்டும் என்ற கருப்பொருளை நோக்கமாக கொண்டு இத்திட்த்தினை எமது ஊரில் நடைமுறப்படுத்த தங்களால் முடிந்த உதவிகளை வழங்குவதாக கூறியதுடன் அதன் முதற்கட்டமாக 500 பனையோலை தட்டுகள் இடியப்பம் அவிக்கும் குடிசைக்கைத்தொழிலாளர்களிற்கு வழங்கிவைக்கப்பட்து.