கோரளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச அபிவிருத்தி தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல் சுற்றாடல் அமைச்சரும், கோரளைப்பற்று மத்தி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இஸட். ஏ. நஸீர் அஹமட் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் பிரதேசத்தில் கடந்த ஆண்டில் நடைமுறைப்படுத்தபட்ட திட்டங்களின் மீளாய்வுகள், திணைக்களங்கள் ரீதியான பிரச்சினைகள் மற்றும் போதைப்பொருள் பாவனை என்பன தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன்போது விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சுற்றாடல், மீன்பிடி போன்ற துறை சார் விடயங்கள் ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் பிரதேச காணி விவகாரங்கள் குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றில் தீர்க்கப்பட்ட காணி உரிமங்கள் தொடர்பில் தெரிவு செய்யப்பட்ட காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள் 150 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
பிரதேச செயலாளர் எஸ். எச். முஸம்மில் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் உதவிப் பிரதேச செயலாளர் எம். ஏ. சி. ரமீஸா பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச் . எம். எம். றுவைத், பிரதேச திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.