பாலமுனையில் பிராந்திய மருத்துவ ஆய்வுகூடம் உதயம்.

(நூருல் ஹுதா உமர்) வைத்தியசாலைகளில் காணப்படும் மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்களுக்கான பற்றாக்குறை மற்றும் மருத்துவ ஆய்வுகூட உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் வளங்களை முகாமைத்துவப்படுத்தும் செயற்றிட்டம் என்பனவற்றை கருத்திற் கொண்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களினால் முன்மொழியப்பட்ட பிராந்திய ஆய்வுகூடம் தொடர்பான பிரேரணை மாகாண சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, தேசிய சுகாதார அமைச்சு என்பவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதற்கான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றிருக்கின்ற நிலையில் குறித்த மத்திய ஆய்வுகூடம் பாலமுனை பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த ஆய்வுகூட நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் அவசரமாக கூட்டப்பட்ட இம்மீளாய்வுக்கூட்டத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களுடன் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம். மாஹிர், உயிரியல் மருத்துவப் பொறியியலாளர் என்.எம். இப்ஹாம் கணக்காளர் உசைனா பாரிஸ் மேற்பார்வை மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர் ஏ.எம்.எம்.சலீம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் குறித்த பிராந்திய ஆய்வுக்கூடத்திற்கான மின் இணைப்பு நீரினணப்பு தொலைபேசி இணைப்பு என்பனவற்றை பெறுவதற்கும் உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் ஏனைய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை பெறுவதற்கான நடவடிக்கைகளும் குறித்த கூட்டத்தின் போதே எடுக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.