மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் சுற்றாடல் அமைச்சர் இஸட்ஏ. நஸீட் அஹமட் தலைமையில் நேற்று(11) மாலை நடைபெற்றது.
பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுதின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தின் போது கடந்த காலத்தில் கடைசியாக நடைபெற்ற குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைவாக மக்கள்நல திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
கல்வி, சுகாதாரம் , மீன்பிடி மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து கடந்தகால கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எட்டப்பட்டன.
மேலும் பொதுமக்களின் குடியிருப்புப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அரிசி ஆலைகளினால் ஏற்படும் சிரமங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்கப்பட்டிருந்தது. அதற்கிணங்க அரிசி ஆலைகளை புன்னக்குடா கடற்கரையை அண்மித்துள்ள அரச காணிகளுக்கு இடமாற்றும் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் நிலவும் பௌதீக மற்றும் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளும் பொருட்டு விசேட குழுவொன்று அமைக்கப்படவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாயத் துறை ஊடாக நகர தோட்டங்களை அமைப்பதற்கான உதவிகளை வழங்குவதென்றும் முடிவுசெய்யப்பட்டது.
விசேடமாக ஏறாவூர்ப் பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்குப் பொருத்தமான திட்டங்கள் அமுல்செய்யப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்து.இக்குழுக்கூட்டத்தில் துறைசார் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.