ஒழுக்கம் விளையாட்டில் இருந்தே உருவாகிறது- சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் உமர் மௌலானா

உயிரிலும் மேலானது ஒழுக்கம் என்கிறார் வள்ளுவர்.அந்த ஒழுக்கம் உருவாவது விளையாட்டிலிருந்து. எனவே நீங்கள் தான் இந்த வலயத்தின் ஒழுக்கத்துக்கு பொறுப்பானவர்கள் என சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா தெரிவித்தார்.

சம்மாந்துறை வலயமட்ட விளையாட்டு போட்டியில் மத்தியஸ்தம் வகிக்க இருக்கும் விளையாட்டுத்துறை ஆசிரியர்களுக்கான சீருடை வழங்குகின்ற நிகழ்வும் போட்டியாளர்களுக்கான அச்சிடப்பட்ட இலக்கங்கள் வழங்குகின்ற நிகழ்வும் நேற்று(10) திங்கட்கிழமை உடற் கல்வி பாட உதவி கல்வி பணிப்பாளர் ஏ. நசீர் தலைமையில் வலயக்கல்வி பணிமனையில் நடைபெற்றது. இதன்போதே சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.

இதன்போது பிரதி கல்விப்ணிப்பாளர் ஏ. எல்.மஜீத், கோட்டக்கல்விப் பணிப்பாளர் பி. பரமதியாளன், உதவி கல்விப் பணிப்பாளர் வீ.ரீ. சகாதேவராஜா அதிபர் கலீல் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டார்கள் .

அங்கு பணிப்பாளர் உமர் மௌலானா மேலும் பேசுகையில் ..

கடந்த காலங்களை போல் அல்லாது எமது பணிப்பாளர் நசீர் புதுஉத்வேகத்துடன் இம்முறை வலயமட்ட போட்டியை முன்னெடுக்க பாரிய முயற்சி எடுத்து வருகிறார் .நாளை சம்மாந்துறை வலயம் மாகாணத்தில் மட்டுமல்ல தேசிய மட்டத்திலும் பேசப்பட வேண்டும் என்பதற்காக பல செயல்பாடுகள் இங்கே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே வலயத்தில் உள்ள பாடசாலை உடற்கல்வி ஆசிரியர்களாகிய நீங்கள் 100 வீத ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.

இறுதியில் அனைத்து உடற்கல்வி ஆசிரிய ஆசிரியைகளுக்கும் சீருடை வழங்கி வைக்கப்பட்டது.
போட்டியாளர்களுக்கான இலக்கங்களை அதிபர் கலீல் பணிப்பாளர் உமர் மௌலானாவிடம் அன்பளிப்பு செய்தார்.