உலக சாதனை படைத்த 59வயதான திருச்செல்வம்

7நிமிடம் 48 செக்கன்களில் 1550 கிலோ எடை கொண்ட ஊர்தியை 400 மீற்றர் தூரம் தாடியால் இழுத்து தென்மராட்சி மட்டுவிலைச் சேர்ந்த 59வயதான செ.திருச்செல்வம் உலக சாதனை படைத்துள்ளார்.

சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று பிற்பகல் தென்மராட்சி-மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற உலக சாதனை நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழிலதிபர் அ.கிருபாகரன் கலந்து சாதனை நிகழ்வினை ஆரம்பித்து வைத்திருந்தார்.

மேலும் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக சமூக சேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி,ஈ.சிற்றி ஆங்கில கல்லூரியைச் சேர்ந்த றஜீபன் ஆகியோரும்,மேலும் கௌரவ விருந்தினர்களாக பன்னாட்டு எம்.ஜி.ஆர் பேரவைத்தலைவர் ம.விஜயகாந்த்,முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் தி.தங்கவேலு,ஊடகவியலாளர் முகுந்தன் ,சாதனையாளரின் நண்பன் தையிட்டி இ.சிவானந்தம் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவன இலங்கை கிளை தலைவர் யோ.யூட் நிமலன்,சந்திரபுரம் கிராம அலுவலர் சுபாசன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.