பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய சி.டி. விக்கிரமரத்னவின் பதவிக்காலம் மேலும் 03 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய சி.டி.விக்கிரமரத்ன கடந்த 26 ஆம் திகதி ஓய்வு பெற்றார்.
புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கிடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.சி.டி. விக்கிரமரத்னவுக்கு சேவை நீடிப்பை வழங்குமாறு அரசியலமைப்புச் சபை பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சி.டி.விக்கிரமரத்னவின் சேவையை நீடிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சி.டி. விக்ரமரத்ன பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து மார்ச் மாதம் 26 ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த போதிலும், அவரது சேவையை 03 மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி இதற்கு முன்னர் நடவடிக்கை எடுத்திருந்தார்.