உலக கலப்பு குத்துச் சண்டைப் போட்டியில் பதக்கங்களை வென்றோருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பாராட்டு

உலக கலப்பு குத்துச்சண்டை சம்மேளனம், இந்திய கலப்பு குத்துச்சண்டை சம்மேளனத்துடன் இணைந்து இந்தியாவில் அண்மையில் நடத்தி முடித்த 26 நாடுகள் பங்கேற்ற இரண்டாவது உலக கலப்பு குத்துச்சண்டை வல்லவர்(2nd World Mix Boxing Championship 2023) போட்டியில் எடைப் பிரிவு மற்றும் பகிரங்க பிரிவுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றி 5 தங்கப் பதக்கங்கள் மற்றும் 4 வெள்ளிப்பதக்கங்களை வென்றெடுத்த இலங்கை வீர வீராங்கனைகள் அண்மையில்(05) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.

இலங்கை வீர வீராங்கனைகளை பாராட்டும் முகமாகவே இச்சந்திப்பு இடம் பெற்றது.திறமைக்கும்,இயலுமைக்கும் சுய முயற்சி ஊந்துதல்களுக்கும் எதுவும் தடையல்ல என்பதை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர்,விளையாட்டுத் துறையில் புதியன புகுதல் ஊடாக இலங்கைக்கு புதியதான விளையாட்டில் பங்கேற்று இலங்கைக்கு பெருமை சேர்த்தமைக்கு தமது பாராட்டுதல்களையும் இதன் போது தெரிவித்தார்.

பதக்கங்கள் வென்று சாதனை படைத்த ஏழு வீர வீரங்கனைகளும் வட மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு,பதக்கங்களை தம்வசப்படுத்திய மூவர் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவிகளாவர்.

இலங்கை கலப்பு குத்துச்சண்டை சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.நந்தகுமார்,ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் சாந்தி நிரோஷ் குமார் மற்றும் வீர வீராங்கனைகளின் பெற்றோர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.