வவுனியாவில் அந்நிய முதலீட்டுடன் பாரிய சீனித் தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கும், அதற்குரிய பாரிய கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அண்மையில் அவசரம் அவசரமாக ஒப்புதல் வழங்கியுள்ளது.
அத்தோடு, தொழிற்சாலையின் அமைவிடத்துக்கெனவும் கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கெனவும் முதற்கட்டமாக 74,100 ஏக்கர்கள் அளவு காணியை விடுவிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.
இத்திட்டத்தை முன்னெடுத்துள்ள தரப்பு, இது போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கென வாராதுவந்த வரப்பிரசாதம் என்று இனிப்பாய்ச் சிலாகித்து வருகிறது. ஆனால், இதன் உண்மைகள் மிகவும் கசப்பானவை. வடக்கில் சீனித் தொழிற்சாலை இனிப்புத் தடவிய விஷம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.
வவுனியாவில் சீனித்தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் பொ.ஐங்கரநேசன் நேற்று வெள்ளிக்கிழமை நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார்.