மட்டக்களப்பு மாவட்டத்தில் படையினர் நிலைகொண்டுள்ள காணிகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுதிய கடிதத்திற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பாராளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிசார் நிலை கொண்டுள்ள தனியார் காணிகளை உடனடியாக விடுவிப்பு செய்ய வேண்டும் என்று உரையாற்றியதோடு மாத்திரம் இன்றி எழுத்துரு மூலமாக 19.06.2023 கெளரவ ஜனாதிபதியின் செயலாளர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைவாக ஒரு பகுதிக்குரிய முதல் கட்ட நடவடிக்கையாக நேற்றைய தினம்( 06.07.2023) ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இ.இளங்கோவன்அவர்களினால் மட்டக்களப்பு மாவட்ட செயலக அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவு பற்று பிரதேச எல்லைக்கு உட்பட்ட பாலையடிவட்டை உபதபாலகம் அமைந்துள்ள ஒரு பகுதி நிலப்பரப்பு அதன் கட்டிடங்கள் மற்றும் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்து இருந்த முழுமையான பகுதி நிலப்பரப்பு மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய தனியார் காணிகளை இராணுவம் மற்றும் பொலிசார் காவல்அரண்கள் அமைத்து இருப்பதாக தமக்கு பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இரா.சாணக்கியனினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க அதிபருக்கு நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து குறித்த புிரதேசசெயலாளர்களுக்கு குறித்தகாணிகள் தொடர்பான தரவுகளை மறுதபாலில் அனுப்பி வைக்குமாறு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சு.சிறிக்காந்தாவினால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.