மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை மற்றும் வீசி வரும் பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்தும், மின்கம்பங்கள் சாய்நனதும், மண் மேடுகள் சரிந்தும் மக்களின் அன்றாட இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
பூண்டுலோயா பிரதான வீதியில் ஹொலிரூட் பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்தமையால் அவ்வழி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கைகளில் பிரதேச மக்களும் தலவாக்கலை பொலிஸாரும் ஈடுப்பட்டு வருகின்றனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் தலவாக்கலை பிரதேசத்தில் தடைப்பட்ட மின்சாரம் நேற்று மாலை வரை வழங்கப்படவில்லை.
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேக்லி தோட்ட குடியிருப்பொன்றின் மீது நேற்று (5) காலை மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால் குடியிருப்பு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இந்த அனர்த்தம் ஏற்படும்போது வீட்டில் எவரும் இருக்கவில்லை எனவும் வீட்டின் சமையலறை மற்றும் படுக்கையறை முற்றாக சேதமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இங்கு வசித்தவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடும் மழை காரணமாக மலையகத்தில் மரக்கறி பயிர்களும் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி காணப்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா நகரில் வீசிய பலத்த காற்று காரணமாக அப்பகுதியிலுள்ள பல வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன் மின்கம்பங்களும் முறிந்து விழுந்தமையால் மின்சாரமும் தடைப்பட்டன.பல வீதிகளின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளன.
இதே வேளை நேற்று காலை தலவாக்கலை வட்டகொடை புகையிரத நிலையங்களுக்கிடையில் புகையிரதம் தடம்புரண்டதால் மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டன.