விடுதலைப்புலிகளின் காலத்தில் கூட இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறவில்லை – எஸ். லோகநாதன்

தன்னினச் சேர்க்கையாளர்களின் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபாடு காட்டுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சி வெளிநாட்டு நிதிகளை பெற்று இவ்வாறான விடயங்களை ஊக்கவிப்பதாகவே நாங்கள் அறிகின்றோம். இவ்வாறான கட்சிகளை மக்கள் எதிர்வரும் காலங்களில் நிராகரிப்பார்கள் என நாம் நம்புகின்றோம்.இந்த கட்சிக்கு மக்கள் கொடுத்த சிறு ஆணையானது மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தவதற்கு தான்.ஆனால் இவ்வாறான விடயங்களில் குறித்த கட்சியானது ஈடுபடாது மக்கள் நலனில் அக்கறை காட்ட முன்வர வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் வருத்தம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனையில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்

சிறிய நாடான இலங்கையில் பல கலாச்சாரங்கள் உள்ளன.இங்கு இந்து பௌத்தம் இஸ்லாம் ஆகியவை சமயங்களாகும்.இச்சமயங்கள் ஏற்றுக்கொள்ளாத தன்னினச் சேர்க்கையாளர்களின் நடவடிக்கைகளை இலங்கை சட்டத்தில் தற்போது உட்புகுத்த அவசியமில்லை.இவ்வாறான விடயங்களை வெளிநாடுகளில் இயங்கும் சில தரப்பினர் இலங்கைக்குள் திணிக்கப்பார்க்கின்றனர்.இந்த அரசாங்கமும் அந்த பணத்தில் ஆடிக்கொண்டு இருக்கின்றனர்.

இந்நடவடிக்கைகளை வெளிநாட்டினரின் திருப்திக்காக இலங்கைக்குள் திணிக்கப் பார்க்கின்றனர்.இவ்வாறான விடயங்களை நாங்கள் எதிர்க்கின்றோம்.மக்களுக்கு தேவையான விடயங்களை நாங்கள் செய்ய வேண்டும்.மக்கள் இன்று பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு உணவின்றி எத்தனையோ பேர் தற்கொலை செய்துள்ளார்கள் என ஊடகங்கள் வாயிலாக அறிந்துள்ளோம்.அவ்வாறான சூழ்நிலை இலங்கையில் உருவாகி வருகின்றது.அரசாங்கம் பைத்திகாரத்தனமாக வேலைகளில் ஈடுபடாமல் மக்கள் நலனில் ஈடுபடுமாறும் இவ்வாறான தன்னினச் சேர்க்கையாளர்களின் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபாடு காட்டுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் கூட இவ்வாறான தன்னினச் சேர்க்கையாளருக்கு ஆதரவு வழங்கப்பட்டிருக்கவில்லை.ஆனால் தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காகவும் தங்களது கட்சியை வளர்ப்பதற்காகவும் இவ்வாறான செயற்பாடுகளை சமூகத்தின் மத்தியில் திணிக்கின்றனர்.இச்செயற்பாட்டை மக்கள் மத்தியில் திணிக்க முற்படுகின்றவர்களுக்கு வட கிழக்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும்.தொழிற்சங்கம் என்ற ரீதியில் நாங்கள் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.

ஏனெனில் கடந்த 33 வருடங்களாக வட கிழக்கு மக்களுக்கு நாங்கள் குரல் கொடுத்து வருகின்றோம்.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சி வெளிநாட்டு நிதிகளை பெற்று இவ்வாறான விடயங்களை ஊக்கவிப்பதாகவே நாங்கள் அறிகின்றோம். இவ்வாறான கட்சிகளை மக்கள் எதிர்வரும் காலங்களில் நிராகரிப்பார்கள் என நாம் நம்புகின்றோம்.இந்த கட்சிக்கு மக்கள் கொடுத்த சிறு ஆணையானது மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தவதற்கு தான்.ஆனால் இவ்வாறான விடயங்களில் குறித்த கட்சியானது ஈடுபடாது மக்கள் நலனில் அக்கறை காட்ட முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம் என குறிப்பிட்டார்.

அண்மையில் தன்னினச் சேர்க்கையாளர்ககள் தங்களது உரிமைகளை வலியுறுத்தி கொழும்பு மற்றும் யாழ் மாவட்டங்களில் ஊர்வலங்கை நடாத்தி இருந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஆதரவு அவர்களுக்கு தெரிவித்து வருவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.