இந்துக்களின் – போர் -கிறிக்கற் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணி வெற்றிவாகை சூடியது..!

(அஷ்ரப் ஏ சமத்)

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி அணிகளுக்கிடையிலான இரண்டு நாட்களை கொண்ட தொடரில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்துக்களின் மாபெரும் சமர் என வர்ணிக்கப்படுகின்ற கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரிகளுக்கு இடையிலான
மாபெரும் கிரிக்கெட் போட்டி, 12வது தடவையாக கொழும்பு சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்றையதினம் ஆரம்பமானது.

நேற்றைய தினம் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு இந்துக் கல்லூரி அணி முதலில் பந்து வீச்சினை தெரிவு செய்திருந்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணியினை 183 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதனை தொடர்ந்து நேற்றையதினம் தனது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்த கொழும்பு இந்துக் கல்லூரி அணி 49 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதனை தொடர்ந்து பலோ ஓண் முறையில் கொழும்பு இந்துக் கல்லூரி அணி இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த நிலையில் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 41 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் ஆட்டம் ஆரம்பமான நிலையில் கொழும்பு இந்துக் கல்லூரி அணி 170 ஓட்டங்களை பெற்று அனைத்து விக்கிட்டுக்களையும் இழந்தது.

இதன் காரணமாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணிக்கு வெற்றி இலக்காக 37 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
37 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணி 12.2 ஓவர்கள் நிறைவில் 1 விக்கிட்டினை இழந்து வெற்றி இலக்கினை எட்டியது.

இந்நிலையில் இந்துக்களின் மாபெரும் சமர் என வர்ணிக்கப்படுகின்ற 12வது கிரிக்கெட் தொடரை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

அத்துடன் இந்துக்களின் போர் என்று வர்ணிக்கப்படும் இக் கிரிக்கெட் போட்டி தொடரினை நினைவு கூறும் முகமாக கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணியானது இன்றைய தினம் காலை வேளையில் கொழும்பு இந்துக் கல்லூரியின் லோரன்ஸ் வீதி நுழைவாயிலில் இருந்து பி சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் அரங்கு வரை பயணித்தமை குறிப்பிடத்தக்கது…