வெளிநாட்டில் வேலைவாய்ப்பு – மோசடி குற்றச்சாட்டில் பெண் அதிரடி கைது

போலந்து மற்றும் மலேசியாவில் வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாகக் தெரிவித்து ஒரு கோடியே முப்பதாயிரம் ரூபாவிற்கும் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் வெளிநாட்டுப் பயணத்திற்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட பெண் ஒருவர் வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு திரும்பிய போது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரான பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த ரத்நாயக்க முதியன்செலாகே ஷியாமலி என்ற சந்தேக நபர், 2021 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து Royal Dream International என்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் அதற்குரிய மீள்பதிவுக்கான காலத்தை எட்டியுள்ள போதும் உரிமம் புதுப்பிக்க ஏற்பாடு செய்யப்படவில்லை. வெளிநாட்டு வேலை தேடுபவர்களிடம் வேலைவாய்ப்புகளை தேடி தருவதாக கூறி பணம் வசூலித்து, உறுதியளித்த படி வேலை வழங்கவில்லை என குறிப்பிட்ட பணியகம் மீது 53 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது.

இதற்கமைய பணியகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இந்த பெண்ணை கைது செய்ய முயன்ற போதிலும், அவர் விசாரணை அதிகாரிகளை தவிர்த்து விட்டு தலை மறைவானார், குறிப்பிட்ட காரணத்தினால் நீதிமன்றத்தால் அவருக்கு 31.05.2023 அன்று பயணத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை (29) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அவரை 2023 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறான வெளிநாட்டு தொழில் கடத்தல்காரர்கள் அல்லது மோசடி நிறுவனங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பணியகத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1989 அல்லது பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் தொலைபேசி இலக்கமான 0112864241 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பணியகத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.