அடிப்படை உரிமைகளை மதிப்பதன் மூலம் சமூகச் சீரழிவைக் குறைக்கலாம்

மனிதன் ஒரு உயிராக இருப்பதனால் அவனுக்கு வாழும் உரிமை உண்டு. மனித உரிமைகள் என்றால் எல்லா மனிதர்களுக்கும் உரிய அடிப்படையிலான உரிமைகளையும், சுதந்திரங்களையும் குறிக்கின்றன. ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கு அமைதியான அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு என்னவெல்லாம் தேவையோ அவற்றை மனித உரிமைகள் எனக் கருதலாம். இவற்றில் அடிப்படைத் தேவைகளான நீர், உணவு, உறைவிடம் போன்றவற்றுடன் கொலை செய்யப்படாமலும். சித்திரவதை செய்யப்படாமலும். அவமதிக்கப்படாமலும் வாழ்வதற்கான உரிமையும் இதில் உள்ளடக்கப்படுகிறது எனவும் அடிப்படை உரிமைகளை மதிப்பதன் மூலமும், சட்டரீதியான தண்டணைகள் மூலமும், சமூகச் சீரழிவைக் குறைக்கலாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி (MWRAF) மற்றும் டயகோனியா Diakonia நிறுவன அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் யூ.எல் ஹபீலா தலைமையில் சமூக அபிவிருத்தியும் இன நல்லிணக்கமும் என்ற தொனிப்பொருளில் இன்று(27) மருதமுனை கலாசார மண்டபத்தில் தமிழ் ,முஸ்லீம் இளைஞர் யுவதிகள் பெற்றோர்கள் கலந்த கொண்ட செயலமர்வின் போது வளவாளராக கருத்துரை வழங்கிய அப்துல் அஸீஸ் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது

இன்று நடைபெறுகின்ற அனைத்து செயற்பாடுகளிலும் மனிதனே அடிப்படையாவான். ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து அவனுடைய மதிப்பையும், உரிமையையும் பாதுகாக்க வேண்டியது சமுதாயத்திலுள்ள அனைவர்களினதும் கடமையாகும்.

2005ம் ஆண்டின் 30 இலக்க விலைமாதர் தொழிலுக்காக பெண்கள் மற்றும் சிறுவர்களை ஈடுபடுத்துவதை தவிர்த்தல் மற்றும் அதற்கு எதிராக கருமமாற்றுதல் பற்றிய இணக்கச் சட்டம் இலங்கையில் உள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம் தண்டணைகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின்படி, இத்தொழிலில் ஈடுபடுத்தல் என்பது சம்பந்தப்பட்ட நபருடைய விருப்பத்துடன் அல்லது விருப்பமின்றியோ அல்லது பணத்திற்கு அல்லது வேறு உதவி;க்காகவோ ஒரு நாட்டில் அல்லது அந்த நாட்டிற்கு வெளியில் விலைமாதர் தொழிலுக்காக பெண்கள் மற்றும் சிறுவர்களை கொண்டு செல்லல், விற்பனை செய்தல், விலைக்கு வாங்குதல் ஆகியவற்ற குற்றமாக கருதுவர்.

இது மட்டுமின்றி இளைஞர்களைப் பாதுகாக்க மிகவும் பெருமதியான சட்டங்கள் எமது நாட்டில் இருப்பதை அனைவர்களும் அறிய வேண்டும்.

மக்களின் சுகாதார, பொருளாதார நல்வாழ்வுக்கான சட்டம் இலங்கைப் பாராளுமன்றத்தில் 2006ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் திகதி நிறைவேற்றப்பட்டது. இது 2006 டிசம்பர் 1ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

குறிப்பாக இச்சட்டத்தின்படி 21 வயதுக்குட்பட்ட எவருக்கும் சிகரட் மதுசாரம் அல்லது பியர் விநியோகித்தல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இதைச் செய்வோருக்கு தண்டப்பணமும் அல்லது ஒரு வருட சிறை அல்லது இரண்டும் வழங்கப்படும்.

எனவே எந்தளவுக்கு ஒரு மனிதனுக்கு உரிமை இருந்தாலும் அது சமுகத்தின் நலன் கருதி மட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கின்றது. இத்தகைய சட்டங்கள் செயற்படும் போது சிகரட், மதுசாரம் அல்லது பியர் தொடர்பில் சிறுவர்களும், இளைஞர்களும் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதோடு இதன் அடுத்த கட்டமான விபசாரம் என்னும் இழிதொழில் வணிகத்தை இல்லாதொழிக்க முடியும் என்பதை அனைவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். மேற்கண்டவாறு அப்துல் அஸீஸ், கருத்துத் தெரிவித்தார்.

அத்துடன் இச்செயலமர்வில் மற்றுமொரு வளவாளராக தேசிய ஔடத அபாயகர கட்டுப்பாட்டு அதிகார சபையின் வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம் ரசாட் போதைப்பொருட்களின் தாக்கம் தொடர்பில் விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.