சம்பியன் பட்டத்தை நாவற்குழி பிக் பூட்ரேஸ் அணி

தென்மராட்சியை மையப்படுத்தி நடத்தப்பட்ட தென்மராட்சி பிக் பாஸ் லீக் மென்பந்து துடுப்பாட்ட தொடரின் சம்பியன் பட்டத்தை நாவற்குழி பிக் பூட்ரேஸ் அணி தனதாக்கிக் கொண்டது.

10அணிகள் பங்குபற்றிய மேற்படி மென்பந்து துடுப்பாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி 25/06 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மட்டுவில் வளர்மதி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.இறுதிப்போட்டியில் மட்டுவில் சுப்பர் கில்லீஸ் அணியை எதிர்த்து நாவற்குழி பிக் பூட்ரேஸ் அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நாவற்குழி பிக் பூட்ரேஸ் அணித்தலைவர் முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்திருந்தார்.
அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மட்டுவில் சுப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 10பந்துப் பந்துப்பரிமாற்றங்கள் முடிவில் 6இலக்குகளை இழந்து 69ஓட்டங்களை பெற்றனர்.

அதன்பின்னர் 70ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நாவற்குழி பிக் பூட்டேஸ் அணி அதிரடித்துடுப்பாட்ட வீரர் சாகித்தியனின் அதிரடியான துடுப்பாட்டத்தின் உதவியுடன் 8ஆவது பந்துப்பரிமாற்றத்தில் மூன்று இலக்குகளை இழந்து வெற்றி இலக்கினை அடைந்து தென்மராட்சி பிக் பாஸ் லீக்கின் சம்பியனை தனதாக்கிக்கொண்டது. இறுதிப்போட்டியில் 32ஓட்டங்களையும் ,2இலக்குகளையும் சாய்த்த நாவற்குழி பிக் பூட்டேஸ் அணியைச் சேர்ந்த சாகித்தியன் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

லீக் தொடரில் சம்பியன் வென்ற நாவற்குழி Big footers அணிக்கு 5இலட்சம் ரூபாய் பணப்பரிசும்-இரண்டாம் இடத்தினைப் பெற்ற மட்டுவில் சுப்பர் கில்லீஸ் அணிக்கு இரண்டரை இலட்சம் ரூபாய் பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கலந்து சிறப்பித்திருந்தார்.
மேலும் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக சமூக சேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி,லயன் நிர்மலா மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.