வாகநேரி வயல் பிரதேசத்தில் கொரியன் கம்பனி

(க.ருத்திரன்)

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் சாப்பமடு வாகநேரி வயல் பிரதேசத்தில் கொரியன் கம்பனி ஒன்றினால் அமைக்கபடவுள்ள சோலர் மின் உற்பத்தி திட்டத்தின் கள நிலவரங்களை பார்வையிட இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அதிகாரிகள் சகிதம் இன்று (24) சாப்பமடு வயல் பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு நிலமைகளை அவதானித்தார்.

குறித்த திட்டம் தொடர்பாக தங்களது வயல் நிலங்களை இழக்கவுள்ள விவசாயிகள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து அவர்களுக்கு சுமுகமான தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்கும் முகமாக அமைச்சர் இவ் விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு, மாவட்ட கமநல திணைக்கள பிரதி விவசாய ஆணையாளர் கே.ஜெகநாத்,மகாவலி அதிகாரிகள்,வன இலகா அதிகாரிகள், மற்றும் பிரதேச விவசாயிகள் வருகை தந்திருந்தனர்.

இதன்போது தங்களால் வழமை போன்று விவசாயம் செய்கை பண்ணப்படும் விவசாய நிலம் சுமார் 353 ஏக்கர் வயல் நிலம் சோலர் மின் உற்பத்திக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதனால் விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாத நிலமை ஏற்படக் கூடிய அபாயகரமான சூழ் நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்தனர்.

அத்துடன் 1952 ஆம் ஆண்டு காலப் பகுதி தொடக்கம் பரம்பரை ரீதியாக விவாயச் செய்கையில் இவ் விடத்தில் ஈடுபட்டு வந்த நிலம் தற்போது அபிவிருத்தி என்ற போர்வையில் பறிபோகும் நிலமை உருவாகியுள்ளதாகவும் இதனை தடுத்து காணியினை பெற்றுத் தருமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதேவேளை குறித்த காணிக்கு பதிலாக மாற்று காணி,நஷ்டஈடு,துப்பரவு செலவு என்பன வழங்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்திருந்த போதிலும் அதனை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.குறித்த நிலவரம் தொடர்பாக தீர்வு பெறும் பொருட்டு அமைச்சருக்கும் அங்கு வருகை தந்த உயர்மட்ட அதிகாரிகாளுக்கும் இடையில் நிண்ட நேர கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதில் மகாவலி அதிகாரிகள் இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தனர்.அதாவது சோலர் மின் உற்பத்தி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட குறித்த விவசாயிகளின் காணிகளை கைவிட்டு அதே இடத்தில் வீதிக்கு மேற்கேயுள்ள வன இலகாவிற்கு உரிமையான காணிகளை திட்டத்திற்கு வழங்கலாம் என முடிவு எட்டப்பட்டது.

அத்துடன் ஒரு சிலருக்கு குறித்த இடத்தில் காணி உள்ளதாகவும் அவர்களுக்கு பதிலீட்டு காணிகள் வழங்கலாம் எனவும் கலந்துரையாடப்பட்டது.அதற்கு வன இலகா அதிகாரிகள் தங்களால் இவ் முடிவினை எடுக்ககூடிய அதிகாரம் இல்லாததால் கொழும்பு தலைமை அதிகாரிகளுடைய உத்தரவினை பெறுவதே பொருத்தமானதாகும் என ஆலோசனை வழங்கினார்.

எனவே எதிர்வரும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டு சிறந்த முறையில் மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் சோலர் மின் உற்பத்தியும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

குறித்த சாப்பமடு வயல் பிரதேசத்தில் 104 பேர் விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இத்திடடம் முன்னெடுக்கப்படும்போது இவர்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதேவேளை சோலர் மின் உற்பத்தி திட்டம் அமுலாக்கப்படும் போது மாவட்டத்திற்கு தேவையான போதியளவு மின்சாரத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்புள்ளதாகவும் மின் துண்டிப்பும் அடிக்கடி இடம்பெறாது என்றும் சிலர் இதன்போது கருத்து தெரிவித்தனர்.