(திருக்கோவில் நிருபர் -எஸ்.கார்த்திகேசு)
திருக்கோவில் மண்டானை கிராமத்தில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம்
மூன்று வாரத்தில் ஒருவர் பலி இரண்டு வீடுகள் மற்றும் வாழ்வாதார பயிர்கள் நாசம்.
அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் 04 மண்டானை சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தில் தொடர்ந்தும் இரவு வேளைகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் கிராம மக்கள் உயிருக்கு அஞ்சி வாழ்ந்து வருவதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.
திருக்கோவில் 4 மண்டானை கிராமத்திற்கு இன்று புதன்கிழமை அதிகாலை இரண்டாவது நாளாகவும் படையெடுத்த காட்டு யானைகள் வீடு குடிநீர் தாங்கி தண்ணீர் இரைக்கும் பம் மற்றும் மரவள்ளி தென்னம் கன்றுகள் வாழை பப்பாசி பயிற்றை போன்ற காணிக்குள் இருந்த அனைத்து வாழ்வாதார பயிர்களையும் நாசம் செய்துள்ளன.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருக்கோவில் பிரதேச செயலக கிராம நிருவாக அதிகாரி ஏ.கந்தசாமி பதில் கிராம சேவை உத்தியோகத்தர் சுகீர்தராஜன் ஆகியோர் பார்iவிட்டு துறைசார் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி இருந்தனர்.
திருக்கோவில் மண்டானை சாகாமம் மற்றும் குடிநிலம் ஆகிய வயல் வெளிகளுக்கு அண்மையில் உள்ள சுனாமி மீள் குடியேற்றக் கிராமங்களில் இவ்வாறு தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அட்டகாசம் கடந்த மூன்று வாரங்களாக இருந்துவருவதுடன் மக்களின் குடியிருப்பு வீடுகள் மற்றும் வாழ்வாதார பயிர்களையும் துவசம் செய்து வருவதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ் காட்டு யானைகள் கிராமத்துக்குள் படையெடுத்து வீடுகள் மற்றும் வாழ்வாதார பயிர்களை தொடர்ந்து நாசம் செய்து வருவதனால் தாம் தொடர்ந்தும் தாங்க முடியாத பொருளாதார பாதிப்புக்களை எதிர் கொண்டு வருவதுடன் உயிருக்கும் அச்சுறுத்தலாக இவ் காட்டு யானைகள் இருப்பதாக விசனம் தெரிவித்துள்ளனர். அத்தோடு தமது உயிர் மற்றும் வாழ்வாதார பயிர்களை பாதுகாக்கும் வகையில் இடைநடுவில் நிற்கும் யானை வேலியை அமைத்து தருமாறும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
இதேவேளை கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் தம்பிலுவில் கமநல சேவையில் பணிபுரிந்து அண்மையில் ஓய்வு பெற்ற சிரேஷ்ட விவசாய போதனாசிரியரான 61வயதுடைய கே.கங்காதரன் இரவு வேளையில் வயல் காவலில் இருந்த போது யானை தாக்குதலுக்கு இலக்காகி மரணித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.