தம்பலகாமத்தில் இலவச நடமாடும் சேவை

ஹஸ்பர்_

கிழக்கு மாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கமைய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் அனுசரனையுடன் தம்பலகாமம் பிரதேச செயலகமும்,
தம்பலகாமம் சுகாதார வைத்திய  அதிகாரி பிரிவும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவையானது இன்று(21) புதன் கிழமை தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த நடமாடும் சேவையில்  இரத்தப் பரிசோதனை, கண் பரிசோதனை, பற் சிகிச்சை, வெளிநோயாளர் பிரிவு பொது வைத்திய சேவை, ஆயுர்வேத வைத்திய சேவை, ஆற்றுப்படுத்தல், சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவி பெறுவதற்கான மருத்துவ சான்றிதழ் வழங்கல், பொது சன மாதாந்த உதவி கொடுப்பனவு, நோய் உதவி கொடுப்பனவு (புற்று நோய்,சிறு நீரக நோய்) , மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணம் வழங்கல், முதியோர் ,தேசிய அடையாள அட்டை இறப்பு பிறப்பு சான்றிதழ் தொடர்பான பல சேவைகளும் இடம் பெற்றன.
 இதில் மீரா நகர்,தம்பலகாமம்,கோயிலடி,கல்மெடியாவ வடக்கு,புதுக்குடியிருப்பு,பொற்கேணி,பாலம்போட்டாறு உள்ளிட்ட கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த  நூற்றுக்கணக்கான  மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள வைத்தியர்கள்,கப்பல் துறை சுதேச வைத்தியசாலை வைத்தியர்கள்,மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எம்.எஸ்.ஹபீபுள்ளா,தம்பலகாமம் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ப.சுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.