முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலத்தில் 1998 ல் தரம் 5ல் கல்வி கற்ற மாணவர்களால் பெருந்தொகை நூல்கள் கையளிப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் 1998ம் ஆண்டு தரம் 5ல் கல்வி கற்ற மாணவர்கள் ஒன்றிணைந்து அவர்களுடன் சம காலப்பகுதியில் கல்வி கற்று அமரத்துவமடைந்த தங்களது தோழர் கு.மனோகரன் அவர்களின் நினைவாக சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான பெருந்தொகை நூல்களை வித்தியாலய அதிபர் மதிப்பிற்குரிய திரு கை. தெய்வேந்திரகுமார் அவர்களிடம் இன்று காலை கையளித்தனர்.

அமரத்துவமடைந்த தங்களது தோழரது கனவுகள் மெய்ப்படவும் தாங்கள் கல்வி கற்ற பாடசாலையின் தற்கால மாணவ சமூகத்தின் உயற்ச்சிக்கு பாரிய பங்களிப்பு நல்கும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் தங்களுடன் கல்வி கற்று உள் நாட்டிலும் தாயகத்தை விட்டு வேறு தேசங்களில் புலம்பெயர்ந்து வாழும் தங்களது வகுப்பு தோழர்களை ஒன்றிணைத்து அவர்களது நிதிப்பங்களிப்புடன் முன்மாதிரியான இச் சேவையினை அவர்கள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வித்தியாலய மாணவர்களின் நன்மை கருதி வித்தியாலயத்துடன் இணைந்து தொடர்ந்து பயணிக்கவுள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் மேலுமொரு தொகுதி நூல்களை வித்தியாலய நிருவாகத்திடம் கையளிக்கவுள்ளதாக குறித்த வகுப்பு மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.