கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் அறிவுறுத்தளுக்கமைய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு , மாகாண சமூக சேவைகள் திணைக்களம் இணைந்து தம்பலகாமம் பிரதேச செயலகமும் முள்ளிப்பொத்தானை ஆரம்ப சுகாதார வைத்திய அதிகாரி பிரிவும் இணைந்ததாக நடாத்தும் நடமாடும் சேவையானது நேற்று (17) சனிக் கிழமை முள்ளிப்பொத்தானை திஸ்ஸபுர ஹமீதியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளரின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த நடமாடும் சேவையில் இரத்தப் பரிசோதனை, கண் பரிசோதனை, பற் சிகிச்சை, வெளிநோயாளர் பிரிவு பொது வைத்திய சேவை, ஆயுர்வேத வைத்திய சேவை,ஆற்றுப்படுத்தல், சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவி பெறுவதற்கான மருத்துவ சான்றிதழ் வழங்கல், பொது சன மாதாந்த உதவி கொடுப்பனவு, நோய் உதவி கொடுப்பனவு (புற்று நோய்,சிறு நீரக நோய்) , மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணம் வழங்கல், முதியோர் ,தேசிய அடையாள அட்டை இறப்பு பிறப்பு சான்றிதழ் தொடர்பான பல சேவைகளும் இடம் பெற்றன. இதில் பல நூற்றுக் கணக்கான மக்கள் இலவச சேவையினை பெற்றுக் கொண்டனர்.முள்ளிப்பொத்தானை வடக்கு,சிராஜ் நகர்,முள்ளிப்பொத்தானை ,முள்ளிப்பொத்தானை கிழக்கு, கல்மெடியாவ தெற்கு கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த பொது மக்கள் இதில் நன்மையடைந்தனர்.
இதில் தம்பலகாமம் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள வைத்தியர்கள்,முள்ளிப்பொத்தானை ஆரம்ப சுகாதார வைத்தியசாலையின் வைத்தியர் வி.ரன்ஜித், கப்பல் துறை சுதேச மருத்துவ வைத்தியசாலை வைத்தியர்கள்,மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எம்.எஸ்.ஹபீபுள்ளா,தம்பலகாமம் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ப.சுதன்,மாவட்ட மேலதிக பதிவாளர் அஸ்வர்,பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.