மட்டக்களப்பில் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு  சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஹோட்டல்களில் தங்குமிட வசதிகளை வழங்கும் விடுதி  உரிமையாளர்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி நிலைய முகாமையாளர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வூட்டும் நிகழ்வு இன்று (15) நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வூட்டல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் விழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  இன்று இடம்பெற்றது.மாவட்ட செயலகம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை இணைந்து எற்பாடு செய்த  இந்நிகழ்வில்  சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் உரிமை மற்றும் அவர்களின் நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது மாவட்டத்தில்  தங்குமிட வசதிகளை வழங்கும் தனியார் ஹோட்டல் மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கு  சிறுவர் பாதுகாப்பு என்றால் என்ன? அது தொடர்பான  கொள்கை, சட்டம், ஹோட்டல்களில் சிறுவர்கள் தங்கும் போது அல்லது அவ்வாறான சம்பவங்களை  எவ்வாறு கையாளுதல், எதிர்காலத்தில் 18 வயதிற்குக் குறைவானவர்களை எவ்வாறு அடையாளம் காணுதல், ஹோட்டல்களுக்கு சிறுவர்கள் வரும்போது அவர்களின் எதிர்கால நலன் குறித்து எவ்வாறு செயற்பட வேண்டும் என்பன போன்ற விடயங்கள் தொடர்பாக சிறுவர் அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு  சிறுவர்,பெண்கள் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி சந்துனிக்கா எதிரிசிங்க, மாவட்ட சிறுவர்  பாதுகாப்பு அதிகாரி நிஷா ரியாஸ், சிறுவர் நன்னடத்தைக் காரியாலய நன்னடத்தை அதிகாரி வரதராஜன், மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் பிரபாகரன் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.