ஊழியர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தித்தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை.

பொருளாதார நெருக்கடியை அடுத்து அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மார்ச் 23, 2023 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம்,கலைக்கப்பட்ட மகநெகும நிறுவனத்தில் பணிபுரியும் பல ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்கும் அபாயத்தில் உள்ளதாகவும்,
இலாபம் ஈட்டும் நிறுவனமாக இருப்பதால்,ஊழியர்களின் வேலை வாய்ப்புகளை உறுதிப்படுத்தித் தருமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்குமாறும் மக நெகும கட்டுமான மற்றும் இயந்திர உபகரணங்கள் நிறுவன ஊழியர்கள் குழுவொன்று அண்மையில் (ஜூன் 9) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
நிறுவன கலைப்பு யோசனையின் விளைவாக,820 ஊழியர்களில் 649 பேர் விருப்ப ஓய்வு மூலம் ஓய்வு பெற்றுள்ளனர் என்றாலும், ஏறக்குறைய 150 க்கும் மேற்பட்ட ஊழியர்கள்,தொழில் தேவைப்பாடு,புதிய வேலையொன்றை தேட இயலாமை,வங்கிக் கடனை அடைக்க வேண்டும் போன்ற நியாயமான காரணங்களுக்காக சேவையில் இருந்து விலகுவதில்லை என முடிவு செய்துள்ளனர்.
ஒட்டுமொத்த ஊழியர்களும் பணியாற்றும் போது மாதாந்த சம்பளம் 60 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தாலும்,
தற்போது 9 மில்லியன் ரூபாவே செலவிட வேண்டியுள்ளதாகவும்,
நிறுவனத்தின் நிலையான வைப்புத் தொகையான 1550 மில்லியன் ரூபாவிலிருந்து கிடைக்கப்பெறும் மாதாந்த வட்டி மற்றும் ஏனைய வருமானமானங்களிலிருந்து கிடைக்கப்பெறும் 30 மில்லியன் ரூபாவின் மூலம் இதனை செலுத்த முடியும் எனவும்,எனவே தமது ஊழியர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்து தருமாறும் எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பில் நீண்ட நேரம் விடய விவகாரங்களை கலந்துரையாடிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள்,எதிர்வரும் நாட்களில் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து இப்பிரச்சினைக்கு சாதகமான பதிலை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.