மனித உரிமை சார்ந்த செயலை ‘வோரம்’ நிறுவனம் முன்னெடுக்கின்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான இணையம் மனித உரிமை சார்ந்த செயலில் மட்டுமல்லாது தற்பொழுது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கொடுக்கும் ஒரு செயல்பாடாக தொழிற்பயிற்சி வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்தில் முன்னேற வழி சமைத்துக் கொடுத்து வருகின்றது என மன்னார் சிரேஷ்ட சட்டத்தரனியும் பதில் நீதவானுமாகிய த.வினோதன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணைய நிறுவனத்தினால் (வோம்) முன்னெடுக்கப்பட்ட தொழிற்பயிற்சி கௌரவிப்பு விழா மன்னாரில் கொக்கஸ் கார்டன் ஹொட்டலில் நேற்று (01) காலை நடைபெற்றபோது இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கலந்த கொண்ட மன்னார் சிரேஷ்ட சட்டத்தரனியும் பதில் நீதவானுமாகிய த.வினோதன் தொடர்ந்து உரையாற்றுகையில்

பாதிக்கப்பட்டவர்களுக்கான இணையம் அல்லது மன்னார் மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக பணிபுரியும் நிறுவனங்கள் இவர்களின் தொண்டு அல்லது சேவை இவற்றை நாம் அளவிட முடியாது.

கடந்த காலங்களில் எமது மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் இன்றும் வடுக்களாக இருக்கின்றது.

ஒரு குறிப்பிட்ட சாரார் அவர்களின் நலனுக்காக எமது மக்களை சிதைத்துள்ளனர்.

எமது நாட்டில் சில பேரினவாதிகள் அதிகார பசிக்கு எம்மை யானை வாய்ப்பட்ட கரும்புபோல ஆக்கி வைத்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்கப் பெற்றுள்ளதா என்பது இன்றுவரை கேள்விக் குறியாகவே இருக்கின்றது.

எத்தனையோ நிறுவனங்கள் அல்லது அமைப்புக்கள் மனித உரிமை ஆர்வலர்கள் இது தொடர்பாக பணி செய்து களைத்து போயுள்ளனர்.

இருந்தபோதும் நடந்ததை நடந்ததாக என விட்டுச் செல்ல முடியாதாக இருந்தாலும் நாம் வேறு வழியில் காலடியை எடுத்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

2009 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து பொது மக்கள் அநீதிகளுக்கான குரல் எழுப்பத் தொடங்கினர். அஞ்சல் ஓட்டம்போல் ஏத்தனையோ தாய்மார் அன்றுத் தொடக்கம் போராட்டங்களை முன்னெடுத்து வந்து இப்பொழுது எமது இனம் சமூகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

பாதிப்டைவர்களுக்கு நீதி குறுகிய காலத்தில் கிடைத்து விடும் என்று நாம் எண்ணிவிடக் கூடாது.

எமது நாட்டை பொறுத்த மட்டில் இது எமக்கு எட்டாக் கனியாகவே இருக்கின்றது. இதற்காக நாம் தளர்ந்து போகக்கூடாது.

நீங்கள் தளர்ந்து செல்லக்கூடாது என்பதற்காகவே இளம் சமூகத்தின் எதிர்காலத்துக்காக உரிமைக்காக குரல் கொடுக்கும் அதேவேளையில் உங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் இந்த ‘வோரம்’ நிறுவனம் இளம் சமூகத்துக்கு தொழிற் பயிற்சியையும் வழங்கியுள்ளது.

முல்லைக் கொடி படர பாரி மன்னன் தனது தேரை விட்டுச் சென்றதுபோல வழிகாட்டல் இன்றி தவிக்கும் இளம் சமூகத்துக்கு இந்த நிறுவனம் ஒரு வழிகாட்டலாக ஊன்றுகோளாக செயல்படுகின்றது.

இந்த நிறுவனம் மனித உரிமை சார்ந்த செயலில் மட்டுமல்லாது தற்பொழுது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கொடுக்கும் ஒரு செயல்பாடாக தொழிற்பயிற்சி வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்தில் முன்னேற வழி சமைத்துக் கொடுத்துள்ளது.

ஆகவே எமது இளம் சமூகம் எமது முன்னோர்கள் எம்மிடம் விட்டுச் சென்றதுக்கு அர்த்தம் கொடுக்கும் விதத்தில் நடந்து கொள்பவர்களாக இருக்க வேண்டும்.

எதிர்கால் எமது சந்ததி இந்த நாட்டில் நிலைத்துக் காணப்பட வேண்டும். இவர்களுக்கு கௌரவம் பேணப்பட வேண்டும். அவர்களின் சுய மரியாதையும் சுய நிர்நயமும் பாதுகாக்கப்பட வேண்டும். நீதி கிடைக்கப்பெற வேண்டும். இதற்காக நாம் ஒன்றுபட்டு மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நிறுவனங்களுடன் இணைந்து உழைக்க வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார்.