யாழ்ப்பாணம் செல்வச் சந்நதி ஆலயத்திலிருந்து கடந்த மாதம் 6ம் தேதி புறப்பட்ட ஜெயாவேல்சாமி தலைமையிலான கதிர்காம பாதயாத்திரை குழுவினர் ஐந்து மாவட்டங்களை கடந்து நேற்று(1) அம்பாறை மாவட்டத்திற்குள் பிரவேசித்து இருக்கின்றார்கள்.
கடந்த 26 நாட்களாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய ஐந்து மாவட்டங்களைக் கடந்து அம்பாறை மாவட்டத்திற்குள் பிரவேசித்துள்ளனர்.
நேற்று முன் தினம் புதன்கிழமை இரவு மண்டூர் கந்தசாமி ஆலயத்தில் தரித்து நின்ற அவர்கள் நேற்று காலை மண்டூர்- குறுமண்வெளி ஆற்றை பாதையால் கடந்துவந்து களுவாஞ்சிக்குடியை அடைந்தனர் .
பகல் கல்லாறு கடலாச்சி அம்மன் ஆலயத்தை தரிசித்து இரவு பெரிய நீலாவணை நாககன்னி ஆலயத்தில் நின்றனர். இன்று(2) வெள்ளிக்கிழமை கல்முனை ஊடாக காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தை வந்தடையவிருக்கின்றனர் .
எதிர்வரும் 11ஆம் தேதி உகந்தை மலையை அடைய இருக்கின்றார்கள். 12ஆம் தேதி காட்டுப்பாதை திறக்கப்பட்டதும் முதல் நாள் காட்டுக்குள் பிரவேசிக்க இருக்கின்றார்கள்.