இம்முறை நெற்செய்கைக்கான உரங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் வவுச்சரில் எந்தவொரு உர வகையையும் கொள்வனவு செய்வதை அரசாங்கம் கட்டாயமாக்கவில்லை என விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அண்மைய நாட்களில் 30 வீத சேதன உரங்களும், 70 வீத இரசாயன உரங்களும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இரண்டு மாவட்டங்களில் உள்ள சில சிறு விவசாயிகள் குழுவொன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிட்ட சில வகையான உரங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அது உண்மையல்ல என அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இரசாயன உரங்கள் அல்லது சேதன உரங்களை விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப கொள்வனவு செய்ய முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வவுச்சர்களை வழங்குவதன் மூலம் விவசாயிகள் இரசாயன உரங்கள் அல்லது கரிம உரங்களை அரச துறை விவசாய சேவை நிலையங்களிலோ அல்லது தனியார் துறையிலோ கொள்வனவு செய்ய முடியும் என விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.