மன்னாரில் விபத்தில் ஒருவர் மரணம் ஐவர் படுகாயம்.

( வாஸ் கூஞ்ஞ)

மன்னார் பிரதான பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் இறந்ததுடன் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் செவ்வாய்கிழமை (23) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக தெரியவருவதாவது
மன்னாரிலிருந்து பிரதான பாலம் ஊடாக பயணித்த மகேந்திரா ரக வாகனம் ஒன்று வவுனியா குழுக்கட்டுச் சந்தியிலிருந்து மன்னார் நோக்கி வந்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் ஒருவர் இறந்ததுடன் ஐவர் படுகாயங்களுடன் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

புதன்கிழமை (24) மன்னாரில் நடைபெற இருக்கும் ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காகவே ஒரு முற்சக்கர வண்டியில் வந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களே இவ் விபத்தில் சிக்கிக் கொண்டனர் என ஆரம்ப விசாரனையில் தெரிய வந்துள்ளது.

மகேந்திரா ரக வாகனத்தின்  கட்டுப்பாடு இழந்தமையாலேயே இவ் கோரவிபத்து இடம்பெற்றதாகவும் இதில் முச்சக்கர வண்டி சாரதி ஸ்தலத்திலேயே இறந்ததாகவும் முச்சக்கர வண்டியில் வந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த கணவன் , மனைவி உட்பட 9 , 6 ,4  வயதுடைய பிள்ளைகளே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர்களை மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் இவர்களில் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளவர்களை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

இவ்விபத்து தொடர்பாக மன்னார் பொலிசார் தீவிர விசாரiனையை மேற்கொண்டு வருவதுடன் இறந்தவரின் சடலத்தை மன்னார் பொது வைத்திசாலைக்கும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.