போலி கடவுசீட்டுடன் நாட்டிற்குள் நுழைந்த சீனர் – அமைச்சரின் தலையீட்டில் விடுவிப்பு

போலி கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்று தடுக்கப்பட்ட நிலையில் சீனப்பொதுமகன் ஒருவர் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் இலங்கையின் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் தலையீட்டினால், விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை இந்த சம்பவம் பதிவாகியிருந்தது.

குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் குறித்த சீனப்பொதுமகனின் கடவுச்சீட்டு போலியானவை என்று கண்டறிந்த போது அவரையும் அவருடன் வந்திருந்த இருவரையும் தடுத்துள்ளனர்.இதன்போது அவர்கள், ஒழுக்கமற்ற முறையில் நடந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் தலையீட்டினால் குறித்த சீனப்பொதுமகன் அன்றைய தினமே விடுவிக்கப்பட்டிருந்தார்.

போலியான கடவுச்சீட்டுடன் பயணித்த சீனப் பயணியை நாட்டுக்குள் நுழைய அனுமதிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம் எழுத்து மூலம் கோரிய இராஜாங்க அமைச்சர் அவர் ஒரு வெளிநாட்டு முதலீட்டாளர் என சுட்டிக்காட்டிஇருந்ததுடன் தமது அமைச்சின் கீழ் வரும் சில வீட்டுத் திட்டங்களுக்கு நிதி முதலீடு செய்வதற்காகவே அவர் நாட்டிற்கு வந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, முதலீட்டாளர் என அமைச்சர் தெரிவித்த சீனருடன் வந்திருந்த மற்றும் ஒரு சீன பிரஜையும் எகிப்தியர் ஒருவரும் நேற்று காலை விடுவிக்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து கருத்துரைத்துள்ள குடிவரவு அதிகாரிகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் போலி கடவுச்சீட்டில் கூட நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.