ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வழங்க வேண்டும் என்பது பற்றிய மக்கள் பிரகடனம் குறித்தான தெளிவுபடுத்தல் செயலமர்வு இன்று (21) மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு தன்னாமுனை மியானி தொழில் நுட்ப நிலையத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த செயலமர்வு நடைபெற்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் கண்டுமனி லவகுகராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பல்கலைக் கழக் மாணவர்கள்,சமூக ஆர்வலர்கள்,இளைஞர் யுவதிகள்,அகம் மனிதாபிமான அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கான தீர்வினை நோக்கிய 100 நாள் செயற்பாட்டு நாளில் வெளியிடப்பட்ட மக்கள் பிரகடனம் நூலாக்கப்பட்டு அது தொடர்பிலும் விளிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இணைந்த வட கிழக்கின் அவசியம் அதன் மூலம் தமிழ் பேசும் மக்கள் உட்பட வடகிழக்கில் வாழ்வோர் அடையப் போகும் நன்மைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.நிகழ்வில் வளவாளராக அமைப்பின் உறுப்பினர் அ.மதன் கலந்து கொண்டு விரிவுரையாற்றினார்.
மேற்படி அமைப்பின் இணைப்பாளர் கண்டுமனி லவகுகராசாவின் உரையின் போது,
கடந்த காலங்களில் இனப் பிரச்சினைக்கான தீர்வாக ஆட்சியாளர்களால் முன்வைக்கப்பட்ட தீர்வு திட்டங்களை கருத்தில் கொண்டு 13 ஆவது திருத்தத்தின் சராம்சத்தை பரிசீலித்து குறிப்பாக 2002 ஆம் ஆண்டு நோர்வே நாட்டின் மத்தியத்துவத்துடன் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிநடாத்தலில் திரு.ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினால் ஒஸ்லோ உடன் படிக்கையின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘ஜக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையிலான தீர்வு’ என்பதனை சீர் தூக்கிப் பார்த்தும் இந்த பிரகடனம் மக்களின் குரலாக வெளிப்படுகிறது என தெரிவித்தார்.
பிரகடனத்தின் ஊடாக மக்களால் முன்வைத்த சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு பற்றிய தெளிவை இளைஞர்கள்,சமூக ஆர்வலர்களுக்கு ஏற்படுத்துவதோடு அவர்களது கருத்துக்களை உள்வாங்கப்படுவதும் இன்றைய கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும் என ஏற்பாட்டாளர்களால் கருத்து முன்வைக்கப்பட்டது.