ஷாப்டரின் சடலத்தை மீள தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு

படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும், பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்த விசாரணைகளுக்காக அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறையிலிருந்து மீள தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஷேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அந்நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனயவுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டது.

அத்துடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஐவரடங்கிய விசேட வைத்தியக் குழு, சடலத்தை மீட்கும் போது அவ்விடத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதால், அவர்களின் பயண வசதிகள், தங்குமிட வசதிகள் மற்றும் ஏனைய நலன்கள் அனைத்தையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் செய்து கொடுக்க வேண்டும் எனவும் மற்றுமொரு உத்தரவையும் நீதிமன்றம் பிரப்பித்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய நேற்று (19) இதற்கான உத்தர்வை பிரப்பித்தார்.

தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை தீர்மானிக்க ஐந்து பேர் கொண்ட விசேட வைத்திய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தடயவியல் மருத்துவ நிபுணரான பேராசிரியர் அசேல மெண்டிஸ் தலைமையில் பேராசிரியர்களான சி.டி.ஆர். பெரேரா, டி.என்.பி. பெர்ணான்டோ ஆகியோரும் விஷேட சட்ட வைத்திய நிபுணர்களான சிவசுப்ரமணியம் மற்றும் ருவன்புர ஆகியோரும் இந்த சிறப்பு குழுவில் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் விஷேட எழுத்து மூல கோரிக்கை ஒன்றினை முன் வைத்த இந்த சிறப்புக் குழு, மரணத்திற்கான காரணத்தை கண்டறிய, ஷாப்டரின் சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் என அனுமதி கோரியது.

இதன்படி, ஐந்து பேர் கொண்ட விசேட வைத்திய குழுவின் இந்தக் கோரிக்கை தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளையும் அழைத்து, நேற்று ஆராய்ந்த நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.