(வாஸ் கூஞ்ஞ)
முள்ளிவாய்க்கால் படுகொலையால் கணவனை இழந்து பெற்றோரை இழந்து தவிப்போருக்கு உதவிக்கரம் நீட்டும்போதுதான் நாம் செய்யும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அர்த்தமுள்ளதாக அமையும் என தலைமன்னார் பங்குத் தந்தை அருட்பணி மாக்கஸ் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
பேசாலை சமூகம் மே 18 அன்று பேசாலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொண்டபோது இதில் கலந்து கொண்ட தலைமன்னார் பங்குத் தந்தை அருட்பணி மாக்கஸ் அடிகளார் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் பலர் தொலைந்து போனார்கள். இவர்கள் தொலைந்து போனவர்கள் அல்லர். மாறாக இவர்கள் எமது நெஞ்சில் குடிகொண்டு இருப்பவர்கள்.
இவர்களை நாம் மறந்து விடுகின்றோம் என்றால் நாம் இந்த மண்ணில் வாழ தகுதியற்றவர்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.
இவர்களின் அழிவால்தான் நாம் இன்று தலைநிமிர்ந்து நிற்கின்றோம். இவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தமையால்தான் நாம் தமிழன் என்ற அடையாளத்துன் நிமிர்ந்து நிற்கின்றோம்.
நாம் இவர்களுக்கு தலைசாய்த்து அஞ்சலியும் செலுத்த வேண்டும். இவர்களின் ஆன்மாவின் நித்திய இளைப்பாற்றிக்காக இறை வேண்டுதல் கேட்டு நிற்கின்ற இந்த நேரத்தில் இவர்கள் எமக்கு பாரிய பொறுப்பை விட்டுச் சென்றுள்ளார்கள் என்பதையும் நாம் மறக்கலாகாது.
இவர்களின் இறப்பால் 96 ஆயிரத்துக்கு மேற்பட்ட விதவைகள் எமது மண்ணில் வாழ்கின்றனர். பல்லாயிரக்கணக்கான அனாதைப் பிள்ளைகள் இருக்கின்றார்கள்.
இவர்களின் கண்ணீரைத் துடைக்கும் பெரிய பொறுப்புக்கள் எம்மிடம் விட்டுச் செல்லப்பட்டுள்ளது. இவர்களுக்கு நாம் உதவிகள் செய்யும்போதுதான் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் அர்த்தம் இருக்கிறது.
ஆகவே இன்று அஞ்சலி செலுத்தும் இந்த இடத்தில் நாம் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் பல வசதிகளுடன் வாழும் நாம் கணவனை இழந்து பெற்றோரை இழந்த இவர்களுக்கு உதவி செய்யும் பாரிய பொறுப்பை எங்கள் கரத்தில் எடுத்துக் கொள்ளுகின்றோம் என்று.
கைநெகிழ்ந்து இருக்கும் இந்த பிள்ளைகளின் கல்விக்காக அன்றாட உணவுக்காக கையேந்தியிருக்கும் இந்த குடும்பங்களுக்காக உதவி செய்ய வேண்டியது இந்தக் காலம்.
மாற்றாற்றல் கொண்டவர்கள் பலர் இருக்கின்றார்கள் தகுந்த இல்லிடம் இல்லாத பலர் காணப்படுகின்றனர். ஆகவே இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் ஒரு குழந்தையாவது அல்லது ஒரு குடும்பத்தையாவது காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனைக் கொண்டவர்களாக நாம் மாற்றம் அடைந்து செயலில் ஈடுபட வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார்.