ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்.

வென்னப்பு கத்தோலிக்க மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் வாக்குறுதி

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள்,குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் மற்றும் பாரிய அழிவுக்கு உள்ளான மக்களுக்கு நீதி நியாம் வழங்கப்படும் என 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தாலும் வழங்கப்பட்ட நீதி நியாயங்கள் எதுவும் இல்லை எனவும்,மிலேச்சத்தனமான தாக்குதலுக்குள்ளான இடங்களை நிர்மாணிப்பதில் கலாசார அமைச்சர் என்ற வகையில் தான் பாரிய பங்காற்றியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அவ்வாறு இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டாலும்,ஒப்பிட முடியாத மதிப்புள்ள மனித வாழ்க்கையை மீட்டெடுக்க முடியாது எனவும்,ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு தலைவர்களும் நீதி வழங்கப்படுவதாக பொய்களை கூறி மக்களை ஏமாற்றியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

எனவே,பயங்கரவாதத் தாக்குதலொன்றில் தந்தையை இழந்த ஓர் மகன் என்ற வகையில்,பயங்கரவாதத் தாக்குதலின் கொடூரத்தையும் நன்கு அறிந்திருப்பதால்,ஈஸ்டர் தாக்குதல் குறித்து வெளிப்படத்தன்மையுடன் கூடிய தேசிய மற்றும் சர்வதேச அளவில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி,இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில் சட்டம் ஒழுங்கை பலப்படுத்த வேண்டும் எனவும்,
பயங்கரவாதத்தை செயல்படுத்தி அப்பாவி உயிர்களை அழிக்கும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தான் நம்புவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் போலவே 220 இலட்சம் மக்களும் எதிர்பார்த்த நீதி நியாயம் நிலைநாட்டப்படும் எனவும் அவர் வாக்குறுதியளித்தார்.

அதிகாரம் கிடைத்தவுடன் டீல்களால் (ஒப்பந்தங்களால்) இவையெல்லாம் மறைந்துவிடும் என்று நினைப்பவர்களுக்கு மற்ற தலைவர்களைப் போல தான் டீல் போடுவதில்லை என்றே சொல்லுவதாகவும், மக்களுடன் தான் டீலே தவிர
கட்சித் தலைவர்களுடன் எந்த டீல்களும் இல்லை என தெரிவித்த அவர்,ஐக்கிய மக்கள் சக்திக்குள் அரசியல் டீல்களோ பண டீல்களோ இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று (11) வென்னப்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.