அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி, திருக்கோவில் பிரதேச செயலகங்கள் சாதனை!

(வி.ரி. சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி மற்றும் திருக்கோவில் பிரதேச செயலகங்கள் தேசிய ரீதியில் விருதுகள் பெற்று சாதனை படைத்துள்ளன.

தேசிய ரீதியில் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கிடையில் நடாத்தப்படும் உற்பத்தித்திறன் போட்டியின் 2020 ஆம் ஆண்டுக்கான போட்டியில் நாவிதன்வெளி, திருக்கோவில் ஆகிய பிரதேச செயலகங்கள் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினைப் பெற்றன.

திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் உதவி பிரதேச செயலாளர் க.சதிசேகரன் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் என்.ரங்கநாதன் ஆகியோர் இவ் விருது களை பெற்று கொண்டார்கள்.

இவ் விருதுக்கான பிரதான மதிப்பீடாக அவ் அவ் பிரதேச செயலகத்தில் பொது மக்களுக்காக வழங்கப்படும் சேவைகளை மதிப்பிடுவதுடன் இலத்திரனியல் நுட்பங்களை உட்புகுத்தி (e-productivity)விரைவான சேவையை வழங்குகின்ற ஆற்றல் என்பவையும் இந் மதிப்பீட்டில் பிரதானமாக மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு இந் விருதுக்காக அரச நிறுவனங்களை தெரிவு செய்கின்றனர்.

மேலும் ,அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் இதுவரையில் பெறப்பட்ட அதிகூடிய அடைவுமட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான விருது வழங்கும் நிகழ்வு ,அலரி மாளிகையில் கடந்த 15.12.2022 அன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த பிரதேச செயலகங்கள் உற்பத்தி திறன் போட்டியில் 3ஆம் இடத்தினைப் பெற்றுக் கொள்ள உறுதுணையாக இருந்த பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களுக்கு மக்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறார்கள்.