விசேட டெங்கு ஒழிப்பு தினங்கள் பிரகடனம்!

விசேட டெங்கு ஒழிப்பு தினங்களாக நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஒரு மாதமாக நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதார அமைச்சு, இந்த டெங்கு ஒழிப்பு தினங்களை அறிவித்துள்ளது.

குறித்த இரு தினங்களில், ஒவ்வொருவரும் தமது வீடுகளிலும் அதனைச் சூழவுள்ள இடங்களிலும் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை ஆராய்ந்து அவற்றை அகற்றுமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

டிசம்பர் 26ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 75,434 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர், இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகமாகும். நாளொன்றுக்கு 200 முதல் 300 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் பதிவாவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.