போராட்டம் நடத்தியவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் – அமைச்சர் நிமல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என்பதனால் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி குறித்து தற்போது விமர்சனங்களை முன்வைப்பவர்கள் நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை என்றும் இக்கட்டான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே அதனை பொறுப்பேற்றார் என்றும் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்கள், ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட, ஆட்சிக்கு வர முடியாத தரப்பினர் ஜனநாயக போராட்டத்தை வன்முறை போராட்டமாக மாற்றி அமைத்தார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மக்கள் மத்தியில் இவர்களுக்கு எந்தளவிற்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதை தெரிந்துகொள்ள போராட்டத்தில் ஈடுப்படுபவர்கள் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் ஆணையை பெற்றுக்காட்ட வேண்டும் என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இதேவேளை புதிய எல்லை நிர்ணய அறிக்கைக்கு அமைய உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெற வேண்டும் என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.