கோவில் பிரச்சனைகளை நாங்களே தீர்க்க வேண்டும்! – ரத்தினசபாபதி குருக்கள்

ஆலயங்களில் ஏற்படும் பிரச்சனைகளை இந்துக்கள் ஆகிய நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என மாவிட்ட புரம் கந்தசுவாமி ஆலய ஆதீன குரு ரத்தினசபாபதி குருக்கள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நாவலர் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

வரலாற்று பிரசித்தி பெற்ற காரைநகர் சிவன் ஆலயத்தினை பாலஸ்தாபனம் செய்வதா? திருவம்பாவை உற்சவத்தினை நடத்துவதா? என்பது தொடர்பில் எழுந்த சர்ச்சையினால் ஆலயத்தை சேர்ந்த சிலர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தினை நாடி உள்ளனர்.

நீதிமன்றத்தினால் மாவிட்டபுரம் பிரதம குருக்கள் உள்ளிட்ட சில குருமாரை நேரில் சென்று ஆராய்ந்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் தெரிவிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இந்து மக்களுக்கு நான் ஒரு கோரிக்கையினை முன்வைக்க விரும்புகின்றேன். எமது இந்து கோயில்களில் அல்லது எமது இந்து மக்களுக்கு இடையிலான பிரச்சனையினை நாங்களே தீர்க்க வேண்டும்.

அடுத்தவரிடமோ அல்லது நீதிமன்றத்திற்கோ அல்லது வேறு தரப்பிடமோ நாங்கள் செல்லக்கூடாது. இந்த விடயத்தினை நாங்கள் இந்து மக்களாகிய அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்,