( வி.ரி. சகாதேவராஜா)
தூய அன்னை ஸ்ரீ சாரதாதேவியாரின் 170 வது ஜெயந்தி தின விழாவை கல்லடி ராமகிருஷ்ணமிஷன் சுவாமி விபுலானந்த மணி மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இராமகிருஷ்ண மிஷன் கல்லடி சிறுவர் இல்ல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் முன்னிலையில் ஜெயந்தி தின விழா கொண்டாட்டம் இடம் பெற்றது.
இந்த விழாவில் இலங்கை ராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மகராஜ் கலந்து கொண்டார்கள்.
இந்தியாவிலிருந்து தவத்திரு சுவாமி கௌதமானந்த ஜீ மகராஜ் காணொளி வாயிலாக கலந்து கொண்டு ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்த மனித வள மேம்பாட்டு நிலையத்தையும், ஜீவனானந்த சமூக சேவைகள் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்கள் .
அத்துடன் “சுவாமி விவேகானந்தரின் 9 அம்ச ஆளுமை வளர்ச்சி திட்டம்” என்னும் மின்னூலையும், ராமகிருஷ்ண மிஷன் பெண்கள் இல்ல மாணவியர்களால் உருவாக்கப்பட்ட “சாரதைக் களஞ்சியம்” என்னும் மின்னூலையும் வெளியிட்டு வைத்தார்கள்.
” தாய்மை நிறை சாரதா” என்ற தலைப்பிலே சாரதா பாலர் பாடசாலை அதிபர் திருமதி இந்திராணி புஷ்பராஜா சிற்றுரையாற்ற திருகோணமலை மாவட்ட செயலக மொழிபெயர்ப்பாளர் திருமதி லலிதா சுதாகரனின் சிறப்புரையும் இடம்பெற்றது.
காணொளி வாயிலாக இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தா ஜீ மகராஜின் ஆசியுரை இடம் பெற்றதுடன் விவேகானந்த மனித வள மேம்பாட்டு நிலையம் ஜீவனானந்த சமூக சேவைகள் நிலையம் பற்றியும் சாரதைக்களஞ்சியம் இலத்திரனியல் சஞ்சிகை பற்றிய அறிமுக உரையை கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்ல உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்த ஜீ மஹராஜ் நிகழ்த்தினார்.
இலங்கை ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மகராஜ் ஆசியுரை வழங்னார் .
மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஏறக்குறைய 800 பக்தர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் 70 வறுமைக் கோட்டு கீழ் வாழும் குடும்பங்களுக்கு உலர் உணர்வு பொருட்களும் உடைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
கலை நிகழ்வுகள் பல இடம்பெற்ற இந்த நிகழ்வு கடைசியாக அன்னதானத்தோடு நிறைவு பெற்றது.